free website hit counter

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை அலற விட்ட தமிழக நிதி அமைச்சர் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது ரப்பர் ஸ்டாம்ப்பாகவும் (அலங்கார முத்திரை) ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் இருப்பது ஆபத்தானது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி காட்டியிருக்கிறார் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

நேற்று (28.5.2021) காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற (ஜி.எஸ்.டி.கவுன்சில்) கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

மதிப்பிற்குரிய மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் தலைவர் அவர்களுக்கும், ஜி.எஸ்.டி. மன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும், பிற மதிப்புமிக்க சிறப்பு அழைப்பாளர்கள். மரியாதைக்குரிய தலைவர் அம்மையார் அவர்களே,..

முதலாவதாக, இந்த மாமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு என்னைப் பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் பங்களிப்பை வழங்கிடவும், இந்த மன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் கருத்துகளை முன்வைக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த மன்றத்தில் இது என்னுடைய முதல் உரையாகும். இங்கே, தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாகவும், எங்கள் மகத்தான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாகவும், நான் பங்கேற்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக கடைபிடிக்கும் கொள்கைகள் மற்றும் இலட்சியங்களுக்காக, அக்கட்சி மக்களின் தீர்க்கமான ஆதரவை பெற்றது. இந்த மன்றம் அமைக்கப்பட்டதிலிருந்து இது எங்கள் கட்சியின் முதல் உரையாகும். எனவே, நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு மற்றும் மாநில சுயாட்சி மீதான அதன் விளைவுகள் குறித்து எங்கள் கருத்துகளை முன்வைக்க உங்களையும், இந்த மன்றத்தின் சக உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் நிலைப்பாடு குறுகிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என எந்தவிதமான கருத்துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நான் உலகளாவிய கண்ணோட்டத்துடன் தொடங்க விரும்புகிறேன். எப்படி எந்த மனிதனும் ஒரு தீவு அல்லவோ, அதே போல் எந்த ஒரு நாடும் தனிமையில் இல்லை. உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும், ஜி 20 நாடுகளின் ஒரு உறுப்பினராகவும், இந்தியா, உலகளாவிய உரையாடல்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. வரலாற்றில் முன்னெப்போதையும் விட, நமது மாண்புமிகு பிரதமரின் பயணங்கள், முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் நமது தேசத்தின் மீது உலகின் கவனத்தை பெரிதும் அதிகரித்துள்ளன.

எனவே, எங்கள் வருவாய் உருவாக்கம் மற்றும் வரி விதிப்பு மாதிரியின் மதிப்பீடு மற்றும் கூட்டாட்சியில் மத்திய மாநில அரசிடையே உறவுகளை, தனியாக மதிப்பிடுவதைக் காட்டிலும், ஒப்பீட்டுச் சூழலில் மதிப்பிடும்பொழுது, முக்கியமான கண்ணோட்டத்தை அளிக்கிறது. கம்யூனிஸ்ட் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் சீனாவிலிருந்து, முதலாளித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளில், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் அல்லது மாநகரங்களுக்கு, நிதி அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில், இந்தியா கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விட பின்தங்கியிருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், மத்திய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும்படியும், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது.

ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும் மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது. மேலும், சில நாடுகளில் இவை மாவட்டங்களுக்கும் மாநகரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நம் அரசியலமைப்பு, அதன் 70 ஆண்டுகாலத்தில், பல திருத்தங்களை மேற்கொண்டதால், ஒரு வளர்ந்து வரும் ஆவணமாக நிரூபிக்கப்பட்டது. ஆயினும்கூட, உலக அளவில் அதிகரித்துவரும் அதிகாரப் பகிர்வின் அனுபவத்திலிருந்து வேறுபட்ட நிலையில், இந்தியா எதிர்திசையில் சென்றுள்ளது. அதாவது, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்தது. உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி முதல் மிகவும் இணக்கமான தேசியப் பொருளாதாரம் வரை, சரக்கு மற்றும் சேவை வரியின் வாக்குறுதிகள் பன்மடங்கு இருந்தது. ஆனால் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

15வது நிதிக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, வரியின் மிதப்புநிலையில் ஏற்படும் பலன்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களுக்கு ஊக்கமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் நடைப்பெறவில்லை. அவ்வாறிருப்பின், தொழில்நுட்ப தலங்களுக்கு மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளுக்கு சமமற்ற அணுகல் காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. மறுபுறம், சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பில், நிதி ஆதாரங்களின் இழப்பு மற்றும் மாநிலங்களுக்கான தனிப்பட்ட நெகிழ்வுத்தன்மை ஆகிய முக்கியமான அபாயங்கள், தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிய வந்தது. இத்தகைய கடுமையான கவலைகள் இருந்தபோதிலும், பல மாநிலங்கள் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தினர். மாண்புமிகு பிரதமர் அவர்கள், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது, மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் உறுதியாகப் போராடியது போல், பாரதப் பிரதமராகவும் அவ்வாறே தொடர்ந்து செயல்படுவார் என்பது தான் அந்த நம்பிக்கையின் முதன்மையான காரணம்.

சரக்கு மற்றும் சேவை வரியின் எதிர்மறையான விளைவுகள் மற்றும் வாக்குறுதிக்கும் உண்மை நிலைக்கும் இடையிலான இடைவெளி என்பது, எங்கள் தாழ்மையான கருத்தின்படி, இவ்விரண்டு காரணங்களால்: சரக்கு மற்றும் சேவை வரியின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் பிரச்சினைகள். சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு வடிவமைப்பானது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது. செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. எந்தவொரு வரிசையிலும் இல்லாமல், அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன் (இது முழுமையானது அல்ல):

GST council is becoming cremonial seal, rubber stamp authority, says TN FM Palanivel Thiagarajan

1. ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும்.

2. ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது. மேலும் உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.

3. தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆய்வாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையில்) எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும்.

4. கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் அமைப்பிலுள்ள குறைபாடுகளை ஈடுசெய்யும் உத்தி, சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது.

5. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

6. ஜிஎஸ்டி செயலகத்தின் வடிவமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலித்து, பல மடங்கு வலுப்படுத்த வேண்டும்.

7. கூட்டத்திற்கு முன் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல், அல்லது, ஒருமித்த கருத்தை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு பிரச்சினையும் ஜிஎஸ்டி மன்றத்திற்கு கொண்டுவரப்படும் தற்போதைய செயல்முறை பலவீனமாக உள்ளது. மேலும், 10 நபர்களைக் கொண்ட இந்த குழு அதிகபட்சம், மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் கூடுகிறது. "மன்றத்தின் ஒப்புதல்" என்ற இறுதி இலக்கை நோக்கி இன்னும் தொடர்ச்சியான, செயல்திறன் கொண்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வழிமுறைகளை கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு இயங்க வேண்டும். அலுவல் ரீதியிலான குழுக்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.

8. மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளுக்கு மாற்றாக, வரி ஆராய்ச்சி பிரிவு போன்ற, ஜிஎஸ்டி மன்றத்திற்கு நேரடி தொடர்பில்லாத அமைப்புகளுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிப்பது, அரசியலமைப்பின்படி சட்டபூர்வமான தன்மை மற்றும் அடிப்படைத் திறன் ஆகிய கேள்விகளை எழுப்புகின்றது.

மேற்கண்ட பிரச்சினைகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவது ஆகும். ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் (குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் குடியேறிய ஒவ்வொருவரிடமிருந்தும்), மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தமை, மாநில அரசின் வரிவிதிக்கும் மற்றும் வருவாய் ஈட்டும் அதிகாரத்தின் மீதான அணுகுமுறையில் ஒன்றிய அரசின் "நன்னம்பிக்கை இல்லாமை", குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில், கருணையின்மை மற்றும் பரிவின்மை கொண்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை, ஆகியவற்றினால் இந்த சீரழிவு ஏற்பட்டுள்ளது.

1. பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில் மாநிலங்களின் பங்கை 42ரூ ஆக உயர்த்திய ஒன்றிய அரசின் நல்ல எண்ணத்தை ஈடுசெய்யும் வகையில் ஒன்றிய அரசு மேல்வரிகளை அதிகரித்துள்ளது (2014 ஆம் நிதியாண்டில் 1.4 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து, 80ரூ உயர்ந்து, 2020 ஆம் நிதியாண்டில் 2.55 இலட்சம் கோடி ரூபாய் வரை)

2. படிப்படியாக, ஆனால் இறுதியில் மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அனைத்து வரிகளையும் கலாலிலிருந்து மேல் வரிக்கு மாற்றுவது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். (2014 ஆம் நிதியாண்டின் கலால் மற்றும் மேல்வரியின் விகிதத்தை ஒப்பிடும்போது, பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளிலிருந்து 50,000 கோடி ரூபாய் மேல்வரியாக மாற்றப்பட்டது - அதாவது, பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில் மாநிலங்களுக்கு உரிய பங்கில் 20,000 கோடி ரூபாய் (50,000 கோடி ரூபாயில் 41ரூ) குறைந்துள்ளது.

3. மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில், மாநிலங்களுக்கான பங்கை பரிந்துரைக்கும்பொழுது, மாநிலம் வசூலிக்கும் வரியின் விகிதத்தை முற்றிலும் கருதாமல், சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அடுத்தடுத்த நிதி ஆணையங்கள், வளர்ந்த மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக அநீதியை இழைத்தது. இதேபோன்று, ஜிஎஸ்டி மன்றத்தின் "ஒரு மாநிலம், ஒரு வாக்கு" (மக்கள் தொகை, அல்லது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, அல்லது தேசிய உற்பத்தி அல்லது நுகர்வு விகிதாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல்) அடிப்படையானது பெரிய, நன்கு வளர்ந்த மாநிலங்களுக்கு பல வழிகளில் அநீதியைச் செய்கிறது. ஜி.எஸ்.டி மன்றத்தில் வாக்குகளை ஒதுக்குவதில் பல்வேறு நியாயமான வழிகள் உள்ளன. உடனடியாக, ஒரு சமமான மாற்று வழியாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமைகளை ஒதுக்கலாம்.

4. கொள்கை மற்றும் கோட்பாட்டிற்கு அப்பால், செயலாக்கத்தில் ஏற்படும் தோல்விகளால், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் உறவுகளில் பிரச்சினைகள் எழுகின்றன. 2020 ஆம் நிதியாண்டுக்கு முன்னர் மாநிலங்களின் இழப்பீட்டு நிதியிலிருந்து 40,000 கோடி ரூபாய் உட்பட ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள பயன்படுத்தப்படாத மேல்வரியை ஒன்றிய அரசு "எடுத்துக்கொண்டது" என இந்திய தணிக்கைத் துறை தலைவரிடமிருந்து பெறப்பட்ட பல தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

5. இந்தப் பின்னணியில், நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவது, மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஒன்றிய அரசு மேற்கொண்ட பரிவின்மையான நிலை, ஆகியவை இந்த உறவில் ஒரு நியாமான கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

6. இழப்பீட்டுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய "உத்தரவாதம் அளிக்கப்பட்ட" வளர்ச்சி விகிதங்களைக் (சட்டப்படி 14ரூ) குறைப்பது குறித்த ஒன்றிய அரசின் வாதங்களுக்கு மாறாக அதன் சொந்த வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 17ரூ அதிகரிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, அரசியலமைப்பிலும் வரலாற்றிலும் காணாத ஒரு வித்தியாசமான நிலைக்கு நாம் வந்துள்ளோம். இந்திய அரசியலமைப்பில் கற்பனை செய்யப்படாத அளவில், அனைத்து அதிகாரங்களையும் கொண்டு ஒரு ஜிஎஸ்டி அமைப்பும் மன்றமும் செயல்படுகிறது. ஆனால், கட்டமைப்பு வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் உள்ள குறைபாடுகளால், இந்த அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இயலவில்லை.

இந்த வித்தியாசமான நிலையை உண்மையிலேயே ஆபத்தானதாக மாற்றுவது என்னவென்றால், மன்றம் சில வழிகளில் வெறும் அலங்கார முத்திரையாகவும், ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் செயல்படுகிறது. பலவீனமான ஜிஎஸ்டி செயலகம் மற்றும் அரசுசார் ஜிஎஸ்டி கட்டமைப்பு போன்ற தற்காலிக முகவர் நிறுவங்களுக்கு கொள்கையை உருவாக்குவதற்கான உண்மையான அதிகாரங்களை (அரசியலமைப்பு ரீதியாக) அளித்துள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் பல கற்றறிந்தவர்களின் கடுமையான முயற்சிகள் இருந்தபோதிலும், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

ஒன்றிய அரசு - மாநிலங்களுக்கு இடையேயான நிர்வாக உரையாடல்களுக்கும் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் (முந்தைய மாநில மன்றம் போன்றவை) போதிய அளவில் மன்றங்கள் இல்லை, என்பது இத்தகைய விளைவிற்கு ஒரு பெரிய காரணமாகும். இயற்கை எப்பொழுதும் ஒரு வெற்றிடத்தை வெறுக்கிறது.

ஒன்றிய அரசு - மாநிலத்திற்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜிஎஸ்டி மன்றம் ஒரு வெற்றிடத்தை தகுதியற்ற முறையில் நிரப்பியுள்ளது. இதற்கு மாறாக இந்த வெற்றிடத்தை, ஏனைய, சிறந்த தகவல் தொடர்பு வழிகள் மற்றும் அமைப்புகளாலும் நிரப்பப்பட வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. ஒன்றிய அரசு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அரசாக இருக்கிறதோ (ஒரு தேசத்தை ஒன்றிணைப்பதில்), அதே போல் ஒரு வழித்தோன்றலாகவும் இருக்கிறது

(குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட, ஒவ்வொருவரும் ஒரு மாநிலத்திலிருந்து வந்தவர்களே). ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர். ஒன்றிய ஆட்சிப்பணி என்று ஒன்றும் இல்லை. இந்த அறையில் உள்ள ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணியாளர்களும் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து வந்துள்ளனர். மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் "நன்கொடையாளராக" ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது. இவ்வாறு செய்வது, அதன் அடித்தளமாக உள்ள மாநிலங்களுக்கு எதிராக செயல்படுவது போல் ஆகும்.

ஒன்றிய அரசு ஒரு முக்கிய நிதிப் பங்கைக் கொண்டுள்ளது - அது அச்சுறுத்தும் வரி வசூலிப்பவராகவோ அல்லது அறக்கட்டளை நிதியத்தின் குறுகிய நோக்கம் கொண்ட நிர்வாகியாக இருப்பதை விட மிக முக்கியமானது. முழு தேசத்தின் நாணய மதிப்பு, பணப் பட்டுவாடா, வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறை மற்றும் நம்பகத்தன்மை (முகவரமைப்புகளிடமிருந்து பெறப்படும் மதிப்பீடுகள்) ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்வகிக்கும் உரிய அதிகார அமைப்பாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஈவுத்தொகையைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது (இதற்கு ஆதாரமாக இந்த வாரம் பெறப்பட்ட 99,122 கோடி ரூபாய்) மற்றும் தேவைப்படும் போது பற்றாக்குறையை சரிசெய்யும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக பேரழிவுகள் மற்றும் இடர்களின் போது, மாநிலங்களுக்கு ஆதரவு, நிவாரணம் மற்றும் தங்குமிடம் வழங்க இதுபோன்ற அதிகாரங்களை அது பயன்படுத்த வேண்டும்.


இறுதியாக, தலைவர் அம்மையார் அவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை நான் தெரிவிக்கின்றேன். இப்போது அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிடில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை நாம் சந்திக்க நேரிடும்.

ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், இந்த மாபெரும் பணியை மேற்கொள்வதற்கு நாம் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளோம். இப்போது இல்லையென்றால், எப்போது? நெருக்கடிகள் எப்போதுமே நிதி அமைப்பு கட்டுமானத்தினை வலுப்படுத்துவதற்கான உந்துதலையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளன. முறைப்படுத்தப்பட்ட வங்கி மற்றும் சந்தைகளின் கருத்துக்கு வழிவகுத்த, 1920 மற்றும் 1930 களின் மாபெரும் மந்தநிலையை நாம் நினைவு கூறலாம்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் நிதிச் சந்தைகளை முறைப்படுத்துவதற்காக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை உருவாக்கியது மற்றும் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த கிளாஸ்-ஸ்டீகல் சட்டம் நிறைவேற்றியது போன்றவையாகும். இதேபோல், உலகளாவிய நிதி நெருக்கடியின் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாக பெரிய நிதி நிறுவனங்களுக்கான உலகளாவிய மேற்பார்வை மாதிரியில் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது. மேலும், ஓய்வூதிய முறைகள் உட்பட அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆரோக்கியத்தின் மேம்பட்ட மேற்பார்வை அதிகரிக்கப்பட்டது. பங்கு பரிவர்த்தனைகளுக்கான நிறுவனங்கள் மூலம் "தோல்வியடையாத அளவிற்கு பெரிய நிறுவனங்கள்" என்ற ஆபத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நம்மால் இது இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்? ஒரு கூட்டாக, சரக்கு மற்றும் சேவை வரிக்கு முந்தைய காலத்தை வசதியாக நாம் அனுபவித்ததுண்டு. அதே வேளையில் நிலை மாறிய காலத்தின் வலியையும் நாம் அனுபவித்ததுண்டு. நாம் எவ்வாறு இங்கு வந்தோம், எது வேலை செய்யும், எது வேலை செய்யாது, எந்தெந்த பழைய முறைகளை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பவை பற்றியெல்லாம் எங்களைத் தொடர்ந்து வருபவர்களைக் காட்டிலும் நாம் நன்கு அறிவோம். இந்தச் செயலற்ற நிலையிலுள்ள சிக்கல் என்னவென்றால், மிக மோசமான, திட்டமிடப்படாத, செயல்நோக்கமற்ற, எதிர்பாராத விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூட கடினமான மற்றும் விரைவான "விதிகளாக" இந்த நிலைமை உருவாக்கக் கூடும். தற்போதுள்ள இறங்குநிலை சூழலை நாம் தடுத்து நிறுத்தி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, நாம் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தின் எண்ணிக்கையால் நாம் மக்களின் நினைவில் இருக்க மாட்டோம். ஆனால் நம் மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்கான வழிகளை நாம் அமைப்பதன் மூலமாகவே நாம் நினைவில் கொள்ளப்படுகிறோம். அரசியல் கட்சிகளாக, நாம் சேர்த்து வைத்திருந்த அதிகாரத்தின் எல்லையை வரலாறு மிக விரைவாகவே மறந்துவிடும். ஆனால், நாம் பொறுப்பில் இருந்த காலத்தில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் அமைதியான சமுதாயம் ஆகியவற்றின் பயன்களால்தான் நாம் நினைவில் கொள்ளப்படுகிறோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த முன்மொழிவுகள் சிலவற்றின் மீது எங்களின் கருத்துக்களை பதிவு செய்யும் பொருட்டு எழுத்துப்பூர்வமாக தனியே வழங்குகின்றேன். மேலும், தேவைப்படின், அக்குறிப்பிட்ட முன்மொழிவுகள் மீதான விவாதத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கக் கோருகிறேன்.

இந்த வருடம், தற்போதைய கோவிட் நிலைமையை கருத்தில் கொள்ளும் போது, வளர்ச்சி விகிதமானது விளிம்பு நிலையிலேயே இருக்கும் அல்லது எதிர்மறையாகக்கூட இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்ற மாநிலங்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன். இதனை கருத்தில் கொண்டு, 2021-2022-ல் பாதுகாக்கப்பட்ட வருவாய் மற்றும் உண்மையில் எதிர்பார்க்கப்படும் வருவாய் இடையேயான இடைவெளியை, மத்திய அரசின் நிதியிலிருந்தோ, அல்லது வெளிச் சந்தைக் கடன் ஏற்பாட்டின் மூலமாகவோ, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்யுமாறு இம்மன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். மேலும், கோவிட்-19 ன் நீண்ட கால பாதிப்பினை கருத்தில் கொண்டு, இழப்பீடு ஏற்பாட்டை 01.07.2022-க்குப் பின்னும் நீட்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்கும்.

இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்வோம். சரக்குகள் மற்றும் சேவைகள் வலைதளம் அமைப்பில் நேரம் மற்றும் பொருள் என்ற முறை மூலமாக மனித உழைப்பை குறைக்கும் பொருட்டு தகவல் தொழில் நுட்பம் குறித்த திட்டங்களை வடிவமைப்பதற்கான கால அவகாசத்தை 31.03.2022 வரை நீட்டிப்புச் செய்வதையும், விலைப்பட்டியல் பதிவாக்கம் தகவு எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன்மூலம் மின்பட்டியல் பதிவாக்க சேவையை திறம்படவும், இலவசமாகவும் வழங்கும் நடவடிக்கையையும் தமிழக அரசு ஆதரிக்கிறது. ழுளுகூசூ அமைப்போடு தொடர்புடைய அனைவரையும் அவ்வமைப்பில் இணைக்கும் முயற்சியாக மாநில வரி அலுவலர்களை மாற்றுப்பணி முறையில் பணிபுரிய வைக்கும் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் மாற்றுப்பணியில் பணிபுரிய பரிந்துரைக்கப்பட்ட தகுதி, மாநிலவரித்துறையில் பணிபுரியும் மூத்த அலுவலர்கள் தேர்வு ஆவதற்கு ஏற்றார்போல் இருப்பது அவசியமாகிறது. இதன் பொருட்டு விவாதிக்க இம்மன்றத்தினை கேட்டுக் கொள்கிறேன்.

தாமதமாக தாக்கல் செய்யப்படும் நமுனாக்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தாமதக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான சட்டக் குழுவின் பரிந்துரையை வரவேற்கிறோம். இருப்பினும், தற்போது நிலவும் பெருந்தொற்றை கணக்கில் கொண்டு இதனைச் செயல்படுத்தும் காலத்தை 31.08.2021-லிருந்து 30.09.2021 ஆக நீட்டிப்பு செய்யலாம். 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான வருடாந்திர நமுனாவை தணிக்கையாளர் அறிக்கையுடன் கூடிய படிவம் ழுளுகூசு-9ஊ-யுடன் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, வரி செலுத்துவோர் தங்களது சுய சான்றுடன் கூடிய இணக்க அறிக்கையுடன் தாக்கல் செய்ய வழி வகுக்கும் கருத்துருவினை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய நமுனாக்கள் குறித்த சட்டத் திருத்தங்களையும் ஆதரிக்கிறோம்.

தற்போது நடைமுறையில் உள்ள காலாண்டிற்கொருமுறை நமுனா தாக்கல் மாதந்தோறும் வரிசெலுத்துதல் முறையை காலாண்டிற்கொருமுறை நமுனா தாக்கல் மற்றும் காலாண்டிற்கொருமுறை வரி செலுத்துதல் மூலம் மாற்றியமைக்கும் திட்டத்திற்கும் கொள்கையளவில் ஆதரவளிக்கிறோம். இது குறித்த முழு விபரமும் கிடைக்கப்பெற்றபின் இறுதிமுடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் தற்போதைய தலையாய பணி, கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதேயாகும்.

பெருந்தொற்றினை எதிர்கொண்டு, கட்டுப்படுத்துவதன் பொருட்டு அவசியமான பல்வேறு மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு வருவதை தாங்களும் அறிவீர்கள். அவைகளில்

(1) மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும்

(2) ரெமிடெசிவிர் மற்றும் டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளை கொள்முதல் செய்வதே முக்கியமானவைகளாகும்.

இச்சூழ்நிலையில் மாநில அரசு அல்லது அதன் முகவர்கள் மேற்கொள்ளும் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசிகள், ரெமிடிசிவிர் மற்றும் டொசிலிசுமப் ஆகியவை மீது பூஜ்ய வரி விகிதத்தினை தற்காலிகமாகவாவது விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதன் மூலம் இத்தகைய அவசியமான பொருட்களின் மீதான விலை குறைவது மட்டுமின்றி, இதனை விற்பனை செய்பவர்களுக்கு பாதிப்பில்லாமல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்க வழி வகுக்கும். இது குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எங்கள் முதல்வர் அவர்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார் என்பதை நினைவு கூர்கிறேன். எனவே,அத்தியாவசியமான இந்த பொருட்களுக்கு பூஜ்ய விகித வரி விதிக்க முடிவு எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகளில் பூஜ்ய வரி விகிதம் தொடர்பாக எழும் சட்ட சிக்கல்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

ஒருமித்த கருத்து உருவாகும் பட்சத்தில், இந்த சட்டச் சிக்கல்களை உரிய சட்ட வரைவுகள் மூலம் தீர்க்கலாம் என்று நான் நம்புகிறேன்.

வரி விகித பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை நாம் பரிசீலிப்போம்.

வரிவிகித பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளான எந்த ஒரு நபரும், மாநில மற்றும் மைய அரசு அல்லது இலாப நோக்கு இல்லா மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்படும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விலக்கு, மற்றும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி / தயாரிப்பு கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கோவிட் சோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான வரி விகிதம் குறைப்பினை நாங்கள் ஆதரிக்கிறோம்.

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய கிளைக்கு வழங்கப்பட்ட டை-எத்தில் கார்பமைசின் மாத்திரைகளுக்கு வரி விகித குறைப்பு, கப்பல் பழுது பார்ப்பிற்கு வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைப்பு, மற்றும் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தெளிவுரைகள் மற்றும் அங்கன் வாடிகளுக்கு விலக்கினை நீட்டித்தது உள்ளிட்ட வரி விகித பரிசீலனைச் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் ஏற்கிறோம். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான வரி விலக்கு கோரிய விண்ணப்பத்தின் மீதான வரி கொள்கைக்கு பதிலாக பொதுச் செலவினத்திலிருந்து மானியமாக வழங்குதல், குறிப்பாக பயனாளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு உருவாக்குவதையுமே மிகவும் பயனுள்ள கொள்கையாகவும் அவர்களுக்கு வழங்கும் சிறந்த உதவியாகவும் இருக்கும் என்ற பரிந்துரையினை நாங்கள் ஏற்கிறோம்.

மேலும், நாங்கள் வரி விகித பரிசீலனைக்குழுவின் இணக்க வரி திட்டத்திலிருந்து ஜஸ்கிரிமை எதிர்மறைப் பட்டியலில் தொடர்ந்து வைப்பதற்கான பரிந்துரையினையும் நாங்கள் ஏற்கிறோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இந்த பெருந்தொற்றுக் காலத்தில் வரி விகித உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரிவிகித பரிசீலனைக் குழுவின் ஜவுளி மற்றும் காலணிகள் மீதான தலைகீழ் வரிவிகித கட்டமைப்பின் திருத்தம் தொடர்பான பரிந்துரையினை அடுத்த கூட்டம் வரை தள்ளி வைக்கலாம் என்று கருதுகிறோம்.

எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டாததால், இதனை தள்ளி வைக்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் சார்பாக இக்கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியினை அம்மையீர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- நன்றி: தமிழக அரசு செய்தி வெளியீடு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction