தமிழகத்தில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அறிவிக்கபட்ட தளர்வுகளற்ற ஒரு வார பொதுமுடக்கம் பலனளித்திருப்பதாகத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலை தற்போது மாறி, எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள கோவை மாவட்டத்தை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி ஆய்வு செய்யவிருப்பதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதாகவும், கொரோனா வரைபடம் தட்டையான நிலையை எட்டவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.