free website hit counter

வினோதய சித்தம் - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமா உலகில் ‘குடும்பப் படம்’ எனும் ஒரு பதம் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ‘உடன்பிறப்பே’ சினிமாத்தனங்களின் மொத்த உருவமாக, ‘பாபநாசம்’ படத்தின் முக்கிய சம்பவத்தை உருவியும், வழக்கமான அண்ணன் - தங்கை பாசத்தை அளவுக்கு அதிகமாக நாடகமாக்கியும் எடுக்கப்பட்ட ஒரு போலி குடும்ப சினிமா எனலாம்.

ஆனால், குடும்பம் எனும் ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு கதைக் களத்தில் ஃபாண்டஸியை நுழைத்து எழுதி, ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

அதாவது, குடும்பக் கதையில் ஃபாண்டஸியைக் கலந்தால் என்ன ஆகுமோ அதுதான் வினோதய சித்தம் படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட். ஹாலிவுட்டில் மரணம் மற்றும் மரணத்துக்குப்பின் என்ன நடக்கிறது என்பதை வைத்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்துள்ளன. 'films based on after death' என கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப்பாருங்கள். பிறகு ரசிகர்கள் அளித்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அவற்றை உங்களுக்கு நேரம் அமையும்போது பாருங்கள். வியந்துபோவீர்கள் அவ்வளவு சிறந்த படங்கள், ஆங்கிலம், கொரியா, ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளன. தமிழில் இப்போது வினோதயச் சித்தம்.

ஒரு நடுத்தர வயதைக் கடந்த ஒரு குடும்பஸ்தன், தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்று நம்புகிறான். அப்போது, நீ செய்வது எதுவும் இல்லை; காரியங்கள் எல்லாம் தானாகவே நடக்கின்றன. நீ அங்கு இருந்தால் உன்னை வைத்து நடக்கும்; அல்லது வேறு ஒரு ஆளை கருவியாக வைத்துக்கொண்டு அந்த வேலைகள் தானாகவே நடக்கும் என்று இயற்கை அவனுக்கு உணர்த்துகிறது. இதில் ஒரு அப்பா, அம்மா, அவர்களின் மகள்கள், மகன், அவர்கள் வாழ்க்கையில் வரும் காதல்கள் என்று எல்லாமே தந்தையின் பார்வையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று சித்தரித்துள்ளார் இயக்குநர்.

கதை என்று பார்த்தால், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா ). தன்னுடைய குடும்பமும் , அலுவலகமும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைக்கிறார். தான் இல்லாமல் குடும்பம், அலுவலகம் இரண்டிலுமே எதுவும் நடக்காது என நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து மேலுலகம் செல்கிறார். அங்குள்ள காலனிடம் (சமுத்திரக்கனி ), தன் இறப்பு சற்றும் எதிர்பாராத ஒன்று எனக்கூறி கெஞ்சிக் கூத்தாடுகிறார். தனது கடமைகளை முடிக்க மூன்று மாத காலம் அவகாசம் தந்தால்தான் உண்டு எனக் கேட்டு வாங்கிக்கொண்டு மீண்டும் பூமிக்கு வருகிறார் . அவர் நினைத்தவை நடந்ததா என்பது கதை.

வாழ்க்கையை ஒரு பொறுப்பான அப்பா எப்படிப் பார்க்கிறார், அதனால் என்ன நடக்கிறது என்பதை, வழக்கம்போல் அறிவுரைகளை அள்ளித் தெளிக்காமல் நறுக்கென்று ஒன்றரை மணிநேரத்துக்குள் சுவாரஷ்யமாகத் தந்திருக்கிறார் சமுத்திருக்கனி.

குறிப்பாக, கடந்த தலைமுறை பெற்றோர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் ‘குடும்ப கௌரவம்’ எனும் ஒரு போலியான நம்பிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டு வாழ்ந்தனர். தங்களது பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தனர். எப்படி ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ரங்கராஜ் பாண்டே பேசிய வசனங்களை கேட்டு ரசிகர்கள் அதிகமாகக் கைதட்டினார்களோ, அப்படி இதில் வரும் அப்பா கதாபாத்திரத்தை அவரது வயதை ஒத்த அனைவருக்கும் பிடிக்கும்.

சாதி மாறித் திருமணம் செய்து கொடுப்பது, அடுத்தவர்கள் உழைப்பை சுரண்டாமல் வாழ்வது, பிற மதத்தாரை வீட்டுக்குள் குடும்பமாக ஏற்றுக்கொள்வது போன்ற படத்தில் வரும் விஷயங்கள் படத்தில் உண்டு. அவற்றை, சமுத்திரக்கனியும் தம்பி ராமையாவும் எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. முற்போக்குக் கருத்துகள் அடங்கிய காட்சிகளும் வசனங்களும் படத்தில் இருந்தாலும், பழமைவாதத்தைத் தூக்கிப்பிடிப்பதும் படத்தில் உண்டு.

சில இடங்களில் தம்பி ராமைய்யாவின் ஓவர் ஆக்டிங் என்பதைத் தாண்டி, படத்தை அவரே முழுமையாக தாங்கிப் பிடித்துள்ளார். சமுத்திரக்கனி ஒரு இயக்குநராக, ஃபாண்டஸி எனும் நவீனத்தைக் கையில் எடுத்திருந்தாலும் பழமைவாதத்தை ஓரம் கட்டி வைத்திருந்தால், தமிழ்நாட்டு சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகவே மாறியிருக்கும். இருப்பினும் வினோதய சித்தம் 100 சதவீதம் வினோதமான அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை.

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction