free website hit counter

ஜெய் பீம் - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே.சந்துரு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். 30 ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, 2006-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். நீதிபதியாக அவரது 7 ஆண்டுகால நீதிமன்றப் பணியில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளைத் தீர்த்து சாதனை படைத்தார்.

முதலில் வழக்கறிஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் பணியாற்றுபவர்கள் தங்களுடைய நீதிமன்ற பணி வாழ்க்கையில், அதிகபட்சமாக 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வழக்குகளில் தீர்வு காண்டிருக்கிறார்கள். இந்த சராசரியாளர்களின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது, இந்திய அளவில் மட்டுமல்ல, நீதிபதி சந்துருவின் சாதனை பணி வாழ்க்கை உலக அளவில் முறியடிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக பெண்ணுரிமை, கருத்துரிமை, தொழிலாளர் உரிமை, விளிம்பு நிலையில் வாழும் ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், முக்கியமான மனித உரிமை மீறல் பிரச்சினைகளில் இவருடைய தீர்ப்புகள் பரவலாகப் பேசப்பட்டன. அவை ஊடகங்களில் பேசுபொருளாயின. அவ்வாறு அவர் வழக்கறிஞராக இருந்து போராடி வென்ற ஒரு வழக்குதான் ‘ஜெய் பீம்’ திரைப்படமாகியிருக்கிறது.

1995-ல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் என்கிற மலைகிராமத்தில் வசித்துவரும் பழங்குடியின இருளர் இனப் பெண்ணான பார்வதியின் கணவர் ராஜாக்கண்ணுவுக்கு நடந்த துயரமான சம்பவம்தான் படம். ‘உண்மையாக நடந்த காவல் நிலையச் சித்திரவைதியில் 100-ல் ஒரு மடங்கு கூட காட்சிப்படுத்தப்படவில்லை’ என்கிறார் இந்த வழக்கில் அன்று மனித உரிமை வழக்கறிஞராக இருந்து பைசா காசும் பெற்றுகொள்ளாமல் பார்வதிக்காக வாதாடிய சந்துரு.

உண்மைக் கதையில் ஒருசில துணை வேடங்களை மட்டும் சேர்த்துள்ளார் இயக்குநர். கதை இதுதான். அறுவடைக்குப் பிறகான கோடையில், வயலில் எலி பிடித்துக்கொடுத்து, எதிர்வரும் அறுவடையில் விளைச்சலைக் காப்பாற்றித் தருவது, மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுந்துவிடும் பாம்புகளை பிடித்து வனத்தில் உயிருடன் விட்டுவிடுவது, மூலிகை மருத்துவம் செய்வது, மலையில் இயற்கையாகக் கிடைக்கும் தேன் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களைச் சேகரித்து மிகக்குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்று வாழ்வது என இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் இருளர் பழங்குடியின மக்கள்.

மலையில் மழை பொய்த்து பிழைப்பில்லாதபோது கீழிறங்கி வந்து செங்கல் சூளை வேலை, விவசாய வேலைகளையும் செய்யக் கூடியவர்கள். அப்படியொரு மலைகிராமத்தில் மண் குடிசையில் வசிப்பவர் இருளர் இனத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. கர்பமாக இருக்கும் மனைவி செங்கேணி, 8 வயது மகள் என அன்பும் பாசமும் வழிந்தோடும் குடும்பம் ராஜாக்கண்ணுவுடையது. அவர் மீது நகைத் திருட்டுக் குற்றம் சாட்டி, அந்த வட்டாரத்தின் போலீஸ் கைது செய்து லாக்கப்பில் அடைத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதை செய்கிறது. ஆனால், அப்பாவியான ராஜாக்கண்ணு திருட்டுப் பட்டத்தை ஏற்க மறுத்துவிடுகிறார். இதில் காவல்துறையின் சித்திரவதை மேலும் அதிகமாகிறது. செய்வதறியாது பதைபதைத்து கதறும் செங்கேணியிடம் ‘போலீஸ் நிலையத்திலிருந்து ராஜாக்கண்ணு தப்பித்துவிட்டதாக சொல்கிறது’ போலீஸ்.

நாட்கள், மாதங்கள் என காலம் ஓட, செங்கேணியின் வயிற்றுப் பிள்ளை வளர்ந்ததே தவிர கணவன் வீடு வரவில்லை. கண்ணீரும் வற்றிப்போன நிலையில் சந்துரு என்கிற இடதுசாரி இயக்க வழக்கறிஞரின் உதவியை செங்கேணி நாடுகிறார். செங்கேணியின் கதையைக் கேட்டும் மனம் நொறுங்கும் சந்துரு.. ராஜக்கண்ணுவை மீட்க, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவாக வழக்குத் தொடுக்கிறார். அந்த வழக்கின் மூலம், செங்கேணி- ராஜாக்கண்ணுவின் குடும்பத்தின் கதையும் சந்துருவின் கதையும் திரையில் விரிகிறது. வழக்கின் பாதையில் ராஜாகண்ணு மீட்கப்பட்டாரா, செங்கேணியின் கண்ணீருக்கு நீதி கிடைத்ததா என்பது மீதிக் கதை.

ஒரு உண்மைக் கதையில் எந்த அளவுக்கு கற்பனையைக் கலக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகத் தெளிவாக இருந்துள்ளார். குறிப்பாக ஆவணப்பட மொழியை தவிர்த்து ஒரு சமூகத் த்ரில்லர் திரைப்படத்துக்கான திரைமொழியை கையிலெடுத்திருக்கிறார். இதனால், செங்கேணி -ராஜாக்கண்ணுவின் அன்பான, காதல் மிகுந்த வாழ்க்கையையும், சுயநலத்துக்காக குரலற்ற மக்களை எத்தனை மனித உரிமை மீறலுடனும் நடத்தலாம் எனும் காவல்துறையில் நிறைந்திருக்கும் கருப்பாடுகளின் கதையையும், அவர்கள் அப்பாவிகள் மீது எந்த எல்லைக்கும் சென்று வன்முறையைப் பிரயோகிப்பார்கள் எனும் உண்மையையும், பொய்யை வைத்து பிழைப்பு நடத்தும் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் கருணையும் கொள்கை பிடிப்பு மிக்கவர்களும் உண்டு என வழக்கறிஞர் சந்துருவின் கதையும் ரத்தமும் சதையுமாக இணைத்து திரைக்கதையாக்கம் செய்த விதத்தில் விறுவிறுப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் தன்மை இணைத்துக்கொடுத்த விதத்தில் வியக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் ஞானவேல் மற்றும் கூடுதல் திரைக்கதையில் பங்காற்றியிருக்கும் கார்த்திகா ஆகிய இருவரும்.

ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களை பிற சமூக மக்களும் காவல்துறையும் எவ்வளவு இழிவாகப் பார்க்கிறார்கள், எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கிறார்கள். அதேபோல் ‘கோர்ட் ரூம் ட்ராமா’க்களில் வரும் வக்கீலின் வழக்கமான புத்திசாலித்தனங்களுக்காக சில கற்பனைகளைச் சேர்ந்திருந்தாலும் எது உண்மை, எது கற்பனை எனத் தெரியாதவாறு காட்சிகளை வடிவமைத்துள்ளதைப் பாராட்டியே தீர வேண்டும். சித்திரவதைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால் பலவீன மனம் கொண்டவர்கள் அக்காட்சிகளைப் பார்க்காமல் தவிர்ப்பது நலம்.

ஐஜி பெருமாள் சாமி, அரசு வழக்கறிஞர், அரசு தலைமை வழக்கறிஞர், சித்திரவதை செய்யும் துணை ஆய்வாளர், சில காட்சிகளே வந்துசெல்லும் மூத்த வழக்கறிஞர் (எம்.எஸ்.பாஸ்கர்), அறிவொளி இயக்க ஆசிரியை என துணைக் கதாபாத்திரங்கள் கதையை உயிர்ப்புக்கொண்டதாக மாற்றுவதற்கு தங்கள் ஆன்மாவைக் கொடுத்துள்ளன.

ராஜாக்கண்ணுவாக நடித்துள்ள மணிகண்டன், அவரது மனைவி செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோள் ஜோஸ் ஆகிய இருவருக்கும் நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ள சூர்யா, அந்தக் கதாபாத்திரத்துக்கான நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

படத்துக்கு பெரும் முதுகெலும்பாக ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.கதிரின் படப்பிடிப்பு, ஷான் ரோல்டனின் இசை பயன்பட்டிருக்கிறது. அதேபோல் கலை இயக்குநரின் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஒரு திரைப்படத்தால், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றாலும் மாற்றத்தைக் கொண்டுவந்த நீதிபதி சந்துரு போன்ற முன்னத்தி ஏர்களை பார்வையாளர்களிடம் எடுத்துச் சென்று அறிமுகப்படுத்த முடியும். அந்த அரிய பணியைச் செய்திருக்கும் ‘ஜெய் பீம்’ பழங்குடியின மக்களின் மீது அரசும் சமூகமும் அக்கறைகொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி அனுப்பும் தலைசிறந்த திரை அனுபவமாக விளங்குகிறது, இருளை விலக்கி ஒளியைப் பாய்ச்சியிருக்கும் இந்த ‘ஜெய் பீம்’.

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction