ஷாருக்கானுக்கு லொகார்னோ திரைப்பட விழாவில் ஆகஸ்ட் 10ல் கௌரவ சினிமா விருது வழங்கப்பட்டது. அன்றைய தினம், ஷாருக்கானின் ரசிகர்கள் வட்டத்தின் பரவசமும், பரபரப்பும், பியாற்சா கிராண்டே பெரும்முற்றத்தில் தனித்து தெரிந்தது.
8000 பேர் ஒரே நேரத்தில் கூடியிருந்து பார்க்கும் பெரும் முற்றம் அது. அங்கு 77 வருடங்களாக வந்து செல்லும் வாடிக்கையான பார்வையாளர்களுக்கும், ஆழமாக சினிமாவை மட்டும் நேசிக்கும் புத்திஜீவிகளுக்கும், இந்த இளம் வட்ட ரசிகர் பரபரப்பு ஆச்சரியம் அளித்திருக்காது.
விருது வழங்கப்பட்ட அன்றைய தினம் ஷாருக்கானின் திரைப்படம் கூட அப்பெருந்திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஷாருக்கானை மேடையேற்றுவதற்கு முன்னர் அப்பெருந்திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவிருந்த திரைப்படங்களின் குழுக்களை மேடையேற்றி அவர்களுடனான கலந்துரையாடல் செய்யும் வழக்கமான நடைமுறைகள் நடைபெற்றபோதெல்லாம், ஷாருக்கானின் ரசிகர் வட்டத்தின் காத்திருப்பு பொறுமை, எல்லை கடந்து கொண்டே இருந்தது. அன்று தான் முதற்தடவை லொகார்னோ விழாவுக்கு வந்தவர்கள் போலும். அவர்களால் லொகார்னோவின் திரைப்பட கலாச்சாரத்தை புரிந்து கொண்டிருக்க முடியவில்லை.

ஷாருக்கான் மேடையேறியதும், தங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து கூச்சலிட தொடங்கியிருந்தனர். முன் வரிசையில் ஒருவர் எழுந்தால், பின் வரிசைகளில் இருக்கும் பலருக்கும், மேடையேறுபவரை நேரடியாக காண முடியாது என்பது கூட உணர முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். மேடைக்கு அருகில் இருந்த ஷாருக்கானின் ரசிகர் வட்டத்தில் பலர் இந்தியர்கள் என நினைத்தேன், ஆனால் பல ஐரோப்பியர்களின் ஆவலும் சேர்ந்தே எழுந்திருந்தது.
நாம் இருந்த வரிசையின் பின்னாலிருந்த இரு ஐரோப்பிய வயதான பெண்கள், இந்தச் சலசலப்புக்களில் சலனமுற்றுப் பேசிக் கொண்டிருந்து கேட்டது.
"யார் இவர்?"
" இவர் தான் இந்திய பாலிவூட் உலகின் சூப்பர் ஸ்டார். இவர் தான் உலகில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராம். இந்த புத்தகத்தில் முன் பக்கத்தில் பார். "

ஷாருக்கான் யார் என்று தெரிந்திருக்காத அப்பெண்மணி, கையிலிருந்த திரைப்பட விழா புத்தகத்தில் பார்க்க, முன் பக்கத்தில் ஷாருக்கான் சதுரங்க விளையாட்டின் ராஜா கட்டையை கையில் வைத்திருந்த முறுக்குற்ற பார்வையுடன் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.
எமக்கு முன் வரிசையில் இருந்த பலர் ஷாருக்கானின் 90 படங்களையும் பார்த்த ரசிகர்கள். ஷாருக்கானின் ரசிகர் வட்டமொன்று, அவரது அனைத்து திரைப்படங்களின் புகைப்படங்களையும், சட்டையில் அச்சடித்து அணிந்து வந்திருந்தனர்.

பெருந்திரையில் ஷாருக்கானுக்கு விருது வழங்கும் முன்னர் அவர் நடித்த திரைப்படங்களின் ஆக்ஷன் காட்சிகள் ட்ரெயிலராக தொகுத்து வழங்கப்பட்டிருந்தது. கண்மடலின் நுணிவரை வரும் கத்தி நுனி, ஆவேசமாக அனல் பறக்கும் சண்டை காட்சிகள், சுவிற்சர்லாந்து குளிரில், ஷாருக்கான் ஜேக்கட்டுடனும், அவர் ஹீரோயின்கள் மெல்லிய சேலையுடனும் டூயட் ஆடும் காதல் காட்சிகள் என அந்த காணொளித் தொகுப்பு காட்சிப்படுத்தி முடிய எனக்குள் "ஆழமான " இரு பயங்கள் எழுந்தன.
1.ஷாருக்கானின் மிக நேர்த்தியான நடிப்புத்திறன் கொண்ட எந்த படங்களையும் இந்த ட்றெயிலர் காட்சிகள் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை.
2. இந்திய கண்டத்தின் சக்திவாய்ந்த மாற்றுச் சினிமாவை ஞாபகப்படுத்தும் எத்தனையோ சினிமா கலைஞர்கள் கண் முன் வாழ்ந்து கொண்டிருக்க, இது மட்டும்தான் இந்திய சினிமாவோ எனும் போலி விம்பத்தை லொகார்னோ திரைப்பட விழா பார்வையாளர்களுக்கு இந்த காட்சிப்பின்னல்கள் கொடுத்துவிடுமோ, என்பவை அந்த அச்சங்கள் ஆகும்.
ஷாருக்கான் தனது உரைகளில் மிகக் கவனமாகவே இருந்தார். அவரது வழமையான எள்ளல் பாணி கதையாடல்களை மிக அவதானமாகவும், மட்டுப்படுத்தியுமே பேசினார். லோகார்னோ பெருவெளி முற்றத்தின் பார்வையாளர்களின் கரகோசத்தை இந்த வாக்கியங்களால் இலகுவாக பெற்றுவிட முடியாது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனை அவர் வெளிப்படையாகவே சொல்லியபோது, லோகார்னோவின் வழக்கமான பார்வையாளர்கள், மென்முறுவலோடு ரசிக்க மட்டும் செய்தார்கள்.

ஷாருக்கான் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்களின், வணிக பொருளாதார சினிமாக்களையும், மாஸ் சினிமாக்களையும், அந்த பிரபலங்களை மையப்படுத்தியும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, அதனூடாக புதிய இளம் சமுதாயத்தை அழைத்து வரலாம் என்பது திரைப்பட விழாவின் முக்கியதொரு நோக்கமாக இருக்கலாம். ஆனால் அது சாத்தியமானதுதானா என்பது பெரும் கேள்விக்குரியது. சினிமாவை பற்றிய தனது புரிதலை 10 நிமிட உரையாக நிகழ்த்தி விட்டு ஷாருக்கான் மேடையை விட்டு இறங்கிப் பியாற்சே கிராண்டே பெருந்திரை வெளியை கடந்த போது, மேடை அருகில் அவரது இரசிகர்கள் இருந்த பல இருக்கை வரிசகைகள், வரிசை வரிசையாக திடீரென்று வெற்றிடமானது.
மீதமிருந்த லொகார்னோ பார்வையாளர்கள், ஒரு பேரலை வந்து சென்ற பின் ஏற்படும் அமைதியைப் போல் உணர்ந்தவாறு, தாங்கள் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்த திரைப்படத்தைக் காண மகிழ்ச்சியுடன் தயாரானார்கள். பியாற்சே கிரான்டேக்கு வெளியே ஷாருக்கானின் ஆர்வலர்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம், பியாற்சே கிரான்டே பெருமுற்றத்திற்குள்ளும் கேட்டன.
ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டதன் பின், பியாற்சே கிரான்டே பெருந்திரையில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் Mexico 86.

புகழ்பெற்ற பிரெஞ்சு நடிகை Berenice Bejo, மெக்சிகோ நடிகர் Loonardo Ortizgris இணைந்து நடித்த திரைப்படம். ஒரு திரில்லர் வகைப்படம். 1976 குவாத்தமாலாவின் கிளர்ச்சியாளர்களில் ஒருவர், அந்நாட்டின் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவதால் மெக்ஸிகோவில் மறைவாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவருடைய 10 வயது மகனை தன்னுடன் அருகில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். மகனின் பாதுகாப்பை பார்ப்பதா அல்லது, தான் போராடும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து தன்னை அர்ப்பணிப்பதா எனும் இரு கேள்விகளுக்குள் சிக்கித் தவித்திருக்கும் அந்த இளம் கிளர்ச்சியாளராக Berenice Bejo.

இதன் இயக்குனர் Cesar Diaz, அறிமுகத்தின் போது, அவருடைய தாயின் கதை இது என்கிறார். தன் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்காக போராடிய தன் தாய், இராணுவ அரசின் அழுத்தத்திற்கு எதிராக எப்படி குடும்பத்தை பாதுகாக்கவும், பெற்றோராக Cesar ஐ வளர்த்தெடுக்க போதிய வெளியை உருவாக்க முடியாமல் தவித்தார் என்பதை மையமாக வைத்து இத்திரைக்கதையை எடுத்திருக்கிறேன் என்றார்.
ஒரு நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் அனைத்து போராட்டக் காரரர்களின் குடும்பத்தினையும் இத்திரைக்கதை ஞாபகப்படுத்திச் செல்லும்.

மறுநாள் ஷாருக்கான் Q&A செய்யவருகிறார் என்பதற்காக ஒன்றரை மணி நேரம் முன்னரே அக்கட்டிட நுழைவாயிலில் கூட்டம் நிரம்பரத் தொடங்கியிருந்த அதேவேளை, Locarno வின் ஒரு நடைபாதையில் முன் தினம் காட்சிப்படுத்தப்பட்ட Mexico 86 படத்தின் முதன்மை நடிகர் Loonardo Ortizgris சர்வ சாதாரணமாக, ஒரு கைப்பையுடனும், இறப்பர் செருப்புக்களுடனும் ஒற்றை மனிதராக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அவருடன் கை குலுக்கி, தெருவில் நின்றவாறே Mexico 86 சினிமா குறித்தும், லத்தீன் அமெரிக்க சினிமா படைப்புலகம் குறித்தும் பேச முடிவதுதான் லொகார்னோ திரைப்படவிழாவின் ஆத்மா என்பதை எம்முள் பதியமிட்டது.
- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்
படங்கள் : Locarno Film Festival / Ti-Press
																						
     
     
    