free website hit counter

யார் காட்டுமிராண்டி..?

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில்,  Claude Barras இன் புதிய அனிமேஷன் திரைப்படம் Sauvage (காட்டுமிராண்டி) பார்த்துக் கொண்டிருந்த போது எம்முள் எழுந்த கேள்வி யார் காட்டு மிராண்டி ?

பிள்ளைகள் எங்களது உணர்ச்சிகளின் கண்ணாடிகள் என்கிறார் Claude Barras. அவரது முழுநீள அனிமேஷன் திரைப்படமான ( Sauvage)'காட்டுமிராண்டி' யும் அதனையே சொல்கின்றது.

இந்தப் படத்திற்கான உழைப்பு அசாத்தியமானது. ஒரு நாளைக்கு நான்கு செக்கன்களுக்கான காட்சிகள் என்ற கணக்கில் 90 நிமிடப் படத்திற்காக சுமார் மூன்றரை வருடங்களாக உழைத்திருக்கிறார்கள் இந்த திரைப்படத்திற்கான அனிமேஷன் குழு. சுவிற்சர்லாந்தின் Valais மலைப்பகுதியில் studio அமைத்து முழு காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டது. ஆக மூன்றரை வருடங்களாக இந்த அனிமேஷன் குழுவினர் ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 
அவர்களை முன்னின்று வழிநடத்தியவர் Claude Barras.

இவருடைய My Life as a Courgette திரைப்படம் 8 வருடங்களுக்கு முன்னர் வெளியான போது சுவிற்சர்லாந்தின் அந்த வருடத்தின் மிகப்பெரும் Box Office வருவாயை ஏற்படுத்தியதும், உலகெங்கும் பல திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதும், ஆஸ்கார் வரை பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Sauvage மழைக்காடுகளின் அழிவையும், அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்த்தும் படம். முதல் படம் போன்றே ஒவ்வொரு பொம்மைகளாக நூற்றுக்கணக்கான பொம்மைகளை மண்களி, மீள்ழ்சுழற்சி செய்யக்கூடிய மரத்தூள் போன்றவற்றை கொண்டு உருவாக்கி, ஒவ்வொரு நடையையும், முகத்திருப்பலையும் கூட கைகளால் அசைத்து Photostill வடிவில் உருவாக்கப்பட்ட படம். அது அவருடைய தேர்ச்சி பெற்ற துறையும் கூட. 

பிறப்பில் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் Claude barras.  அவருடைய படைப்புக்கள் சிறுவர்களை மையப்படுத்தியிருந்த போதும், இயற்கை பாதுகாப்பை பற்றி பேசுவதை எப்போதும் தவிர்த்ததில்லை.  இம்முறை, மலேசிய எல்லைக்கு உட்பட்ட Borneo தீவின், Penan பூர்வீக குடிகளின் வாழ்வியலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். 

புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து மனித, இயற்கை பாதுகாப்பு உரிமைபோராட்டக் காரர் Bruno Manser, 2000ம் ஆண்டு தொடக்கத்தில் மலேசியாவில் திடீரென்று காணாமல் போயிருந்தார். 5 வருடங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரின் மறைவு இன்னமும் மர்மமாக இருக்கும் நிலையில், மலேசிய மழைக்காடுகள், கடதாசி, பால்ம், எண்னெய், fiber உற்பத்திகளுக்காக பல சர்வதேச நிறுவனங்களால் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களாக அழிபட்டு வருகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Bruno Manser ன் மறைவே இந்த படத்தின் தொடக்கம் என்கிறார் Claude Barras. 

படத்தின் தொடக்க காட்சிகளின் முதலிரு நிமிடங்களிலேயே, எது காட்டுமிராண்டித்தனம், யார் காட்டுமிராண்டிகள் எனும் கேள்விகளை ஆழமாக எம்முள் கேட்கத்தொடங்குகிறது. காடுகளை அழிப்பதை எதிர்க்கும், போராட்டக்காரர்கள், விலங்குகள் கொல்லப்படுவதில் தொடங்கி, பூர்வீக வன வாசிகளின் நவீனப் பள்ளிக் கல்வியில் பார்க்கப்படும் பாகுபாடு வரை படம் அலசுகிறது. 

இவற்றின் மத்தியில் வளரும் இளம் சமுதாயத்தின் கைத்தொலைபேசி பாவணை, அதில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், ஆபத்தா, உதவியா, அல்லது புதிய தொழில்நுட்ப பரிமாணங்களை தவிர்க்காது, சூழல் பாதுகாப்புக்கு அவற்றை உபயோகபடுத்த முடியுமா என்பது வரை அக்கேள்விகள் தொடர்கின்றன. படம் முடியும் வரை, பயம், கோபம், கவலை, ஏமாற்றம், வெறுப்பு, அன்பு, பொருமை, மன்னிக்கும் குணம் என அனைத்து உணர்வுகளுக்குள்ளும் இந்த களி மண் பொம்மைகள் புகுந்து விளையாடுகின்றன. 

இசையும், இப்பொம்மைகளுக்கு உயிர்கொடுத்த குரல்பதிவுகளும் எம்மை இவை பொம்மைகள் என்பதையே மறக்க செய்துவிடுகின்றன. இவை அனைத்தும் ஒரு நாளுக்கு 4 செக்கன்கள் என்றபடி அசைத்து உருவாக்கிய தருணங்கள் என்பதை நம்பமுடியவாறு செய்கின்றன.

இதன் இயக்குனர் Claud Barras இன்று லொகார்னோவில் சிறுவர் படைப்புக்களுக்கான உயர் விருதை பெறுகின்றார். இவருடைய இந்த படமும், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு பிறகு (2024), முதன் முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. சுவிற்சர்லாந்தில் நடைபெறும் முதலாவது மக்கள் காட்சி. நிச்சயம் அடுத்து வரும் இரு வருடங்களுக்கு இந்த திரைப்படம் உலகெங்கும் பல மூலைகளுக்கு பயணிக்கும் எனும் நம்பிக்கை திரைப்பட நேர்த்தியிலும், அது சொல்ல வரும் முக்கியமான சமூக சிந்தனை கதையிலும் தெரிகிறது. 

Sauvage சிறுவர்களுக்கான அனிமேஷன் திரைப்படம் மட்டுமல்ல. பெரியவர்கள், பெரியவர்களாக மாறுவதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்கும் படம். இந்த திரைப்படத்தை எவ்வளவு பேர் பார்க்க கொண்டு செல்ல முடிகிறதோ அந்தளவு மகிழ்வடைவேன் என்கிறார் Claud Barras. இந்த படத்தை ஊடக காட்சியில் காணக்கிடைத்த ஒவ்வொரு ஊடகவியலாளனதும், பொறுப்பும், கடமையும் என்பதாகத் தோன்றியது எமக்கு.

படத்தின் தொடக்கத்தில் வரும்  " நாம் வாழும் பூமி எங்களுக்கானதல்ல. எமது பிள்ளைகளிடமிருந்து கடன் வாங்கப்பட்டது "  மேற்கோள் வாக்கியம் சொல்லும் செய்தியும் அதுதான்.  Claud Barras சொல்லாத செய்தி, நல்லதொரு கருத்தினைச் சொல்ல தேர்ந்த ஒரு படைப்பாளிக்கு கதாநாயகர்கள் தேவையென்றில்லை. களிமண் கிடைத்தாலும் போதுமென்பது. அதன் செயலில் விளைந்த திரைவடிவம்  Sauvage.

பியாற்சே கிரான்டே பெருமுற்றப் பேரரங்கில், இயக்குனர் Claud Barras அவர்களுக்கு சிறப்பு விருதுக் கௌரவம் வழங்கப்பெற்றது. அதனை இந்த ஆண்டு சிறுவர் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட ஒருவர் மூலம் வழங்கியதில் விருதும் சிறப்புப் பெற்றது.

வரும் ஒக்டோபர் 16ந் திகதி சினிமாத் திரையிடலுக்கு வரும் இப்படத்தினை, உங்கள் பிள்ளைகளுடன்   சினிமா அரங்குகளில் பாருங்கள். அப்போது உங்களிடமும் யார் காட்டுமிராண்டி எனும் கேள்வி நிச்சயம் எழும்.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

படங்கள்: Locarno Film Festival / Ti-Press  

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula