நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பறந்தார்.
ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்முறையாக ரஃபேல் விமானத்தில் திரெளபதி முர்மு பறந்துள்ளார். முன்னதாக, 2023ஆம் ஆண்டு சுகோய்-30 போா் விமானத்தில் முர்மு பறந்துள்ளார்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் விமானம், இந்திய விமானப் படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது. தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் 114 விமானங்களைக் கொள்முதல் செய்ய விமானப் படை தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் பயன்படுத்துவதற்காக 26 ரஃபேல் போா் விமானங்களை ரூ.64,000 கோடிக்கு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இந்தியாவும் பிரான்ஸும் கடந்த ஏப்ரலில் இறுதி செய்தன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அண்மையில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ரஃபேல் போா் விமானங்கள் முக்கியப் பங்காற்றின. பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்த விமானங்கள் மிகத் துல்லிய தாக்குதல் நடத்தின.
முன்னதாக, அஸ்ஸாம் மாநிலம், தேஜ்பூரில் உள்ள விமானப் படை நிலையத்தில் கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சுகோய்-30 போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் முா்மு பறந்தாா். இதற்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவா்கள் அப்துல் கலாம் (2006), பிரதீபா பாட்டீல் (2009) ஆகியோா் சுகோய் 30 போா் விமானத்தில் பறந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
