free website hit counter

மதுரை ஆதீனம் 292 ஆவது மகாசந்நிதானத்தின் மறைவும் புதிய மகாசந்நிதானத்தின் பீடாரோஹணமும் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தப்பெருமான் மதுரைக்கு எழுந்தருளிய போது அவர் எழுந்தருளிய மடமே அவரது பாரம்பரியமாக இன்றும் மதுரையாதீனமாக திகழ்கிறது. அவ்வகையில் சைவ ஆதீனங்களிடையே பழைமை மிக்க இந்த ஆதீனத்தில் இன்று வரை 291 குருமகாசந்நிதானங்கள் அருளாட்சி செய்துள்ளனர்.

இந்த ஆதீன 233ஆவது சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள் துறையூர் அரசனின் தொழுநோயை வீபூதியிட்டு நீக்கியவர். 1865ஆம் ஆண்டு வரை மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியனவும் இந்த ஆதீன கட்டுப்பாட்டிலேயே சிறப்புற்றிருந்துள்ளன.

இராமநாதபுரம் பாஸ்கரசேதுபதி மகாராஜாவின் ( 1873- 1903) குருவாக இந்த ஆதீனசந்நிதானங்களே திகழ்ந்துள்ளனர்.
மருதபாண்டியச் சகோதரர் இந்த ஆதீன திருஞானசம்பந்தர் எழுந்தருள வெள்ளித்தேர் சமர்ப்பித்துள்ளனர்.
நல்லைநகர் ஆறுமுகநாவலரை பாராட்டி அப்போதைய சந்நிதானம் அவர்கள் தாமணிந்திருந்த ஆறுகட்டி சுந்தரவேடங்களை அணிவித்ததாக சொல்லப்படுகிறது.

அண்மையில் 291ஆவது பட்டம் சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்ததேசிக பரமாச்சார்யர் பூர்வாஸ்ரமத்தில் இலங்கை- கொழும்பில் வாழ்ந்தவர். இவர் 1955ல் உருவாக்கிய “ஹிந்து தர்ம பிரசார சங்கம்” செய்த பணிகள் பற்பல.. சைவ வைணவ பெரியவர்களை ஒன்றிணைத்து இந்து ஒற்றுமையை நிலைநாட்ட இவர்கள் பெருமுயற்சி செய்தார்கள். ஜோதிஷம், ஆவி உலகம் முதலிய ஆய்வுகளில் அழுந்தியிருந்தாலும் தர்ம வளர்ச்சிக்கு இவர்கள் இயன்ற பணி செய்தார்.
--
யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை பிரம்ம ஸ்ரீ சிவசுப்ரம்மண்யசர்மா (மணி பாகவதர்) அவர்களுக்கு கஷாய வஸ்த்ரம் அளித்து துறவறம் அளித்தவர் இவரே. அத்தோடு தம் குருவான ‘ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்யர்’ என்ற நாமத்தை சூட்டி மணிபாகவதரை நல்லூரில் சைவாதீனம் ஸ்தாபிக்கச்செய்தவர் இவரே. ஆக, யாழ்ப்பாணத்தில் சைவ ஆதீனமான திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் தாய் ஆதீனம் மதுரையாதீனமே ஆகும். சமய குரவருள் ஞானசம்பந்தர் பேரிலேயே பழமையான ஆதீனம் உள்ளது. ஆக, இத்தகு பாரம்பரியமான ஆதீனத்தின் 292 ஆவது பட்டமாக விளங்கியவர் அருணகிரிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்.

தமிழ், ஆங்கிலம் முதலிய பன்மொழிப்புலமையும் சமயத்திற்கு அப்பால் அரசியல், சினிமா, ஊடகவியல் என்று பல்துறை ஈடுபாடு கொண்டவர் இவர். சீர்காழியைப் பூர்வீகமாக கொண்ட இவர் தருமை ஆதீனத்தில் துறவறம் பூண்டு பின்நாளில் மதுரை ஆதீனமாக எழுந்தருளியவர். பல்சமய ஈடுபாடும் பன்மொழிப்புலமையும் பல்துறை ஈர்ப்பும் இவரை பல விஷயங்களில் தலையிட வைத்தது. அதனால் இவர் சர்ச்சைகளின் நாயகரானார்.

12 வருடங்களின் நிறைவில் உங்களுக்காக.. !

ஒரு கட்டத்தில் இவைகள் அளவை மிஞ்சி விட்டதாக செய்திகள் வந்தபோது நான் கூட மதுரை ஆதீனத்தை பாதுகாக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன். என்றாலும், அதை எல்லாம் கருத்திலே கொள்ளாமல் மிக அன்பாக -ஆதரவாக என்னுடன் பேசியும் தம் கருத்தை சொல்லி ஆசி வழங்கி கடிதம் அனுப்பிய பண்பாளர் அவர்.

ஒரு பெரிய ஆதீன சந்நிதானம் என்ற பந்தா இல்லாமல் என்னை போன்ற எளியரோடும் சில கருத்தியல் பேதங்களை தாண்டி இயல்பாக பழகுவது இலகுவில் பிறரிடம் காண இயலாப் பெரும் சிறப்பு. இதை விட, இலங்கை தமிழர் வாழ்வு சீர்பெற வேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர். இத்தகு பண்பு நலன்களை கொண்ட சுவாமிகளின் பரிபூரணம் (மறைவு) சைவ தமிழுலகிற்குப் பேரிழப்பாகும்.

அதே வேளை, சுந்தர மூர்த்தி சுவாமிகளின் குருபூஜையான ஆடிச்சுவாதியில் புதிய மகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தருமை மற்றும் துறைசை முதலிய சைவாதீன மகாசந்நிதானங்கள் முன்னிலையில், பொறுப்பேற்றுள்ளமை சிறப்பானதாகும். சிவாகம விதிப்படி சிவாச்சார்யர்களால் பூஜிக்கப்பட்ட கும்பங்கள் அபிஷேகிக்கப்பட்டு புதிய சந்நிதானம் சுவாமிகள் பீடாரோஹணம் செய்கிறார்.

தமிழ் ஞானசம்பந்தர்- கௌணியர் கோன்- வள்ளல் பிரானின் திருவடிகளையும் குருமகாசந்நிதான மரபையும் வணங்கி, தொடர்ந்தும் மதுரை ஆதீனம் சைவ- தமிழ்- கலை- பண்பாட்டுப் பணிகளில் முன்னிற்கப் பிரார்த்திப்போம்.

4தமிழ்மீடியாவிற்காக : தியாக. மயூரகிரிக்குருக்கள்,
ஆசிரியர்,
இந்துசாதனம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction