சனாதன தர்மம் எந்தவகையில் சிறந்தது? எனும் கேள்விக்கு எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் விரிவான பதிலே இப்பதிவாகும்.
இது தான் முடிவு என்று சனாதன தர்மம் சொல்லவில்லை. இவர்தான் கடவுள் என்று சனாதன தர்மம் நிறுத்திக்கொள்ளவில்லை. இங்கே வந்து வணங்கு என்று உங்கள் பிரார்த்தனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை. இந்த மந்திரம் சொன்னால் போதும் எல்லாமும் சரியாகும் என்ற வாக்குறுதியைத் தரவில்லை. அதனால்தான் இந்து மதத்தில் இத்தனை கோவில்கள். இத்தனை ஸ்வாமிகள். இத்தனை விக்ரகங்கள். இத்தனை வழிமுறைகள். இந்த மந்திரம் போதுமா? இல்லை. இதற்கு அப்பாலும் இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இந்த தெய்வம் போதுமா? இல்லை.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று பல்வேறு விதமான சக்திகளை உணர்ந்து உள்ளுக்குள்ளே அனுபவித்து அந்த சக்தியைக் கடவுளாகச் சொல்ல, அதைவிட இது, இதை விட அது என்று படிப்படியாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இடையறாத தேடலாக இருக்கிறது. இருட்டில், பெரும் கானகத்தில் எங்கே, எங்கே வாழ்க்கை, எங்கே கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிறது. அது சொன்னதைத் திருப்பிக் கொண்டு சொல்லவில்லை. சொல்லுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்கிறது.
சனாதன தர்மம் கடவுள் என்ற விஷயத்தை முடித்துவிடவில்லை. அதுபற்றி எப்படியும் சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு, விளக்க முடியவில்லையே என்ற வருத்தம் வளர்ந்துகொண்டிருக்கிறது. மற்ற மதங்களை விட சனாதன தர்மம் என்கிற இந்து மதம் எதனாலும் அழியாததற்கு இந்தத் தேடல் காரணம்.
எத்தனை பேர்கள் பிறமதத்தைத் தழுவினாலும் இந்து மதத்தின் வலிமை குறையவே இல்லை. ஏனெனில் வலிமை என்பது எண்ணிக்கையில் இல்லை. கொள்கையில் இருக்கிறது. கொள்கை என்பது இந்து மதத் கடவுள் தேடலில் இருக்கிறது. கடவுள் தேடல் முற்றுப் பெறுதலே அல்ல. அது விதம்விதமாக வெளியே வந்துகொண்டிருக்கும். முற்றுப்பெற்றவை எண்ணிக்கையைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கும்.
எந்த ஜீவராசிகளையும் சிந்தனை சொற்கள், செயல்கள் வழியாக துன்புறுத்தாதே. எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள். சத்தியத்தை கடைப்பிடி. இதுவே வேதம் சாஸ்திரம் மற்றும் புராண நூல்களின் சாரம் என்று வேத வியாசர் கூறினார். சனாதன தர்மம் என்பது சத்தியத்தையும் அகிம்சையும் அடிப்படையாகக்கொண்ட தர்ம மார்க்கம். இது எந்த காலத்திலும் மாறாத தர்மம். எப்போதும் புதிய தேடலைக் கொண்டிருக்கும் தர்மம்.