free website hit counter

போரும், புலப்பெயர்வும், வாழ்வும், புரிதலும் : ஓரு பொது  உரையாடல் 

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் இலங்கை தமிழ், சிங்கள சினிமாக்கள் என்பவற்றுடன் மட்டுமன்றி, இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமான புலப்பெயர்வின் தாகக்கங்கள், மாற்றங்கள், குறித்து தங்கள் அனுபவங்களினூடு ஆய்வு செய்கின்ற கலந்துரையாடல் ( From Sri Lanka to Switzerland ) ஒன்றினையும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.

 ஃப்ரிபோர்க் மாநிலத்தில் வாழக்கூடிய இலங்கைச் சமூகத்தின் பிரதிநிதிகள், கலந்து கொண்டு உரையாடிய இந்த நிகழ்வு SRG, SSR, தொலைக்காட்சிகளின் அனுசரணையுடன் 23.03.25 ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு இடம் பெற்றது. சினிமாவுக்கு அப்பால் சமூகம் சார்ந்த ஒரு பார்வையாகவும், கருத்துப் பரிமாற்றமாகவும் நடந்த இந்நிகழ்வு ஆங்கில மொழியிலும், பிரெஞ் மொழிபெயர்புடனும் நடைபெற்றது.

மதி சொம்மெர் (  Founder of Moxymentum, Recrutement & HR ) மிக நேர்த்தியாகவும், அழகாகவும் நெறியாள்கை செய்ய, சுரேஸ் யோகராஜா (Secretary, Tamil Forum Fribourg ), தெர்ரேல் அபயசிங்கே (Terrel Abeysinghe -Journalist) மிர்னா கணபதிப்பிள்ளை (Member of the Tamil community ) அரியாணா ஒஸ்தினி (Master's student, UNIFR ) ஆகியோர் உரையாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

உரையாடலில், புலப்பெயர்வு, அதன் அழுத்தம், ஆரம்ப கால அனுபவங்கள், கல்வி, தொழில் வாய்ப்பு, கலாச்சாரம், சுவிஸ் சமூகத்துடனான இணைவு, எனப் பல்வேறு விடயங்கள் குறித்த தங்கள் வாழ்நிலை அனுபவங்களை 
உரையாளர்கள் அழகாக வெளிப்படுத்தினார்கள். பல்கலைக்கழக ஆய்வு மாணவியான அரியானாவின் உரையில், இங்குள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் குறித்த நோக்கும், மிர்னா கணபதிப்பிள்ளையின் உரையாடல் வழியாக இங்குள்ள இரண்டாம் தலைமுறையினரது அனுபவங்களும், நேர்த்தியாக வெளிவந்தன.

தமிழ்சமூகப் பிரதிநிதி சுரேஸ் யோகராஜாவும், பத்திரிகையாளர் தெர்ரால் அபயசிங்க இடப்பெயர்வின் அவலங்களையும், வலிகளையும், தமிழ், சிங்கள சமூகங்களின் குரலாகப் பேசினர்.  உள்நாட்டு யுத்தத்தில் முரண்பட்டிருந்த இரு சமூகங்களின் பிரதிநிதகளான அவர்கள் ஒன்றாகவிருந்து உரையாடும்போது, போரின் அவலமும், வலியும், இடப்பெயர்வின் துயரமும், ஏறக்குறைய ஒன்றாகவேயிருந்தது. ஆயினும் பத்திரிகையாளர் தெர்ரால் அபயசிங்க தமிழமக்களின் வலிகளும் துயரமும் மிகப்பெரிது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். அவரது உரையின் பல இடங்களில் சமூகங்களுக்கிடையிலான மரியாதை, அங்கீகரிப்பு, என்பனவற்றின் அவசியத்தைக் குறிப்பிட்டார். இலங்கையின் தமிழ் சிங்கள சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவினைப் பாதித்த விடயங்களாக அவை இருந்ததையும் குறிப்பிட்டு, அதற்கான காரணிகளாக அரசியலாளர்களின் தவறு என்பதையும் வெளிப்படுத்தினார். 

இலங்கையின் இனமுரண்பாடு குறித்து, இரு சமூகங்களின் பாதிப்புற்றவர்களின் பிரதிநிதிகள், பொது வெளியில் நேர்மையாக உரையாடின், பரஸ்பரம் இரு சமூகளின் இழப்புக்களது வலிகளின் புரிதலும், மாற்றத்துக்கும், அமைதிக்கான சூழலும், அதற்கான அரசியல் தீர்வுகளும், பெறமுடியும்.  ஆனால் அது எத்தகைய வெளிப்படையானதும் பொதுத் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டான  உரையாடலாக அமைந்தது இந்த ஒன்றரைமணிநேர உரையாடல். 

 உரையாடலில் பார்வையாளர்களாக  சுவிஸ் பிரஜைகள் பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டிருந்த நிலையில், எம்மோடு உரையாடிய ஒரு சுவிஸ் இளைஞன், இந்த நிகழ்வில் ஏன் தமிழ்மக்கள், குறிப்பாக இளையவர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு எம்மிடம் பதிலேதுமில்லை. ஆனால் இத்தகைய சமூகப் புரிந்துணர்வுக்குரிய ஒரு உரையாடலுக்கான களத்தினை அமைத்துக் கொடுத்தமைக்காகப், ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாக்குழுவினையும், அதில் நேர்த்தியாக உரையாடிய பிரதிநிதிகளையும், நெறியாளரையும் நன்றாகவே பாராட்டலாம். 

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

படங்கள் : நன்றி FIFF

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula