free website hit counter

வாழ்வின் முக்கியமான நாள்' - சிம்பொனிஇசை நிகழ்வின் பின் இளையராஜா பெருமிதம்

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிம்பொனி இசை அமைத்தது வாழ்வின் முக்கியமான நாள் என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் இசை உலகின் இசைஞானி போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜா,  தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்து, தற்போது லண்டனில் சிம்பொனி இசையை அமைத்து தனது வாழ்நாளின் உச்சத்தை தொட்டுள்ளார். 

லண்டனில் உள்ள ஈவெண்டிம் அப்போலோ அரங்கில், ராயல் பிலார்மோனிக் குழுவுடன் இணைந்து 'வேலியண்ட்' சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றியுள்ளார்.  இதன்மூலம் மேற்கத்திய இசையின் மும்மூர்த்திகளாக கொண்டாடப்படும் மொசார்ட், ஹெய்டன், பீத்தோவன் வரிசையில் இணைந்துள்ள முதல் இந்தியர் என்ற சாதனையை இசைஞானி இளையராஜா படைத்துள்ளார்.

திரைப்பட இசையின் எந்தவொரு தாக்கமும் இல்லாமல் 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்துள்ள இளையராஜா, மார்ச் 8ஆம் தேதி அதை அரங்கேற்றி உள்ளார்.  சிம்பொனி நிகழ்த்த மேடைக்கு வந்த இளையராஜாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரங்கு நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மேற்கத்திய இசையில் மிகவும் சிக்கலான, அதே நேரத்தில் மிகவும் நுணுக்கமான ஒரு இசைப்படைப்பாக பார்க்கப்படுகிறது சிம்ஃபொனி. இதை அரங்கேற்றம் செய்த இளையராஜா முகத்தில் மகிழ்ச்சி பெருமிதம் பொங்கியது.  மகிழ்ச்சி ததும்ப பேசிய இசைஞானி இளையராஜா, "இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது" என்றார். 

மேடையில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், "நாட்டே பெருமைக்கொள்ளும் வகையிலான இந்த சிம்பொனி குறித்து எதேனும் கூற விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா "இதை அனுபவித்துதான் உணர முடியும்" என்றார். அத்துடன், இது தனது வாழ்வின் மிக முக்கியமான நாள் என்றும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். 

இந்த நிகழ்வில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula