மே மாதம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் சூரிய பகவான் அதனை அப்படியே "ஸ்ட்ரா" போட்டு இழுத்து விடுகிறார்.
மக்களின் தாகத்தை போக்குவதற்காக சாலையோரம் எங்கும் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குளிர்ந்த தண்ணீரை குடிப்பதற்காக பொதுமக்கள் பலரும் மண்பனைகளை வாங்க தொடங்கியுள்ளனர்.
இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை, பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. மண்பானை நீர் தாகம் தணிப்பதோடு மட்டுமில்லாமல், உடலில் ஏற்படுகிற பல பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. ஆரோக்கியத்துக்கும் உகந்தது.
மண்பானை நீர் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்குகிறது. கோடையில் ஏற்படுகிற நா வறட்சி, உடல் நீர் இழப்பு போன்றவற்றைத் தடுக்கிறது. உடலுக்கு நோயை ஏற்படுத்துகிற வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
மண்பானையை எப்படி பயன்படுத்த வேண்டும்கோடை காலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் சுவை மற்றும் நறுமணத்துக்காக தண்ணீரில் வெட்டிவேர், எலுமிச்சைப்பழம் போட்டு வைப்பார்கள். வெட்டி வேரும், எலுமிச்சை பழமும் குளிர்ந்த நீரை மருத்து குணம் கொண்ட தண்ணீராக மாற்றுகிறது. வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்புவோருக்கு இந்த மண்பனை தண்ணீர் அமிர்த கரைசலாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல.
அதேபோல் மண்பனையில் கைப்பிடி அளவு தேற்றான் கொட்டையை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டிப் போடுவது அவசியம். இவ்வகை கொட்டை கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழித்து நீரை சுத்தப்படுத்தும் என்றும் வாரம் ஒருமுறை அல்லது தண்ணீரை மாற்றும்போது புதிதாக தேற்றான் கொட்டைகளைப் போட வேண்டும் எனவும் சித்த மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்ச்சியான நீர் வேண்டும் என்பதற்காக மண்பானையை உபயோகப் படுத்துகிறவர்கள் சமீபகாலமாக நாகரிகம் என்ற பெயரில் வண்ணம் பூசி உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான ஒன்று. ஏனென்றால், பெயின்ட் அடிப்பது பார்க்க அழகாக இருக்கலாம். இதனால் மண்பானையின் பயன் எதுவும் கிடைக்காது.
மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துவாரங்கள் வழியே நீர்த் திவலைகள் வெளிப்படுவதும் தடைபடும். இதன்மூலம் மண்பானையின் இயற்கையான குணங்கள் கெட்டு நன்மைகளும் தடைபடும்.
தாகத்தை போக்குவதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மண்பானை தண்ணீரை அனைவரும் பருகி ஆரோக்கியம் பெறுவோம்.
-வேதா