free website hit counter

4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுக்ரேனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யாவிடம் வீழ்ந்தது!

கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை யுக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலினை முற்றாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார். எனினும் அங்கிருக்கும் மிகப் பெரிய இரும்பு ஆலை ஒன்றிட்குள் இன்னமும் 2000 யுக்ரேனிய வீரர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களைச் சரணடைய பணிக்கப் பட்டிருப்பதாகவும் கூடத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் யுக்ரேன் அதிபர் செலென்ஸ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கியேவில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அந்தோனி பிளிங்கென் மற்றும் அமெரிக்க துணை செயலாளர் லொயிட் ஔஸ்டின் ஆகியோரைச் சந்திக்கவிருப்பதாக முன்பே அறிவித்திருந்தார்.

பெப்ரவரி 24 ஆம் திகதி யுக்ரேன் போர் தொடங்கிய பின்பு யுக்ரேன் அதிபரைச் சந்திக்கும் முதலாவது அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளுடனான கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு பெப்ரவரி 19 ஆம் திகதி மூனிச் நகரில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை செலென்ஸ்கி நேரில் சந்தித்திருந்தார்.

யுக்ரேன் யுத்தம் ஆரம்பித்த போது ரஷ்யத் துருப்புக்களால் கைப்பற்றப் பட்டிருந்த கெர்சொன் என்ற தெற்கே உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ரஷ்ய கட்டளைப் பிரிவு ஒன்றைத் தாம் தாக்கி அழித்திருப்பதாக சனிக்கிழமை யுக்ரேன் இராணுவம் அறிவித்துள்ளது.

 

பிரான்ஸின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு இன்று ஞாயிறு (ஏப்பிரல் 24) நிகழ்கிறது

இன்று ஏப்பிரல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பிரான்ஸின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு பிரான்ஸில் நிகழ்ந்து வருகின்றது. இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸின் தற்போதைய அதிபரும் ஐரோப்பிய யூனியன் சார்புக் கட்சியின் வேட்பாளருமான 44 வயதாகும் எமானுவேல் மாக்ரோனும், மற்றும் வலது சாரி யூரோசெப்டிக் வேட்பாளரான 53 வயதாகும் மாரின் லே பென் என்ற பெண்மணியும் போட்டியிடுகின்றனர்.

2017 ஆமாண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸின் அதிபராக 4 வருடங்களுக்கும் மேலாக அதிபர் மாக்ரோன் இருந்து வருகின்ற நிலையில், இவரது ஆட்சி மீது பொது மக்களிடையே சற்று கோபம் இருந்த போதும், இவ்விரு வேட்பாளர்களிலும் மாக்ரோன் செல்வாக்கு மிகுந்தவராக அறியப் படுகின்றார்.

 

நைஜீரிய எண்ணெய்க் கிணற்றில் மோசமான தீ விபத்து! : 100 பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை ஏப்பிரல் 22 ஆம் திகதி இரவு நைஜீரியாவில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டு எண்ணெய்க் கிணறுகளுக்குப் பரவி ஏற்பட்ட மோசமான விபத்தாக மாறியதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நைஜீரியாவின் தென்கிழக்கே ஒஹாஜீ எக்பிமா என்ற இடத்தில் உள்ள இந்த எண்ணெய்க் கிணறு சட்ட விரோதமாக செயற்பட்டு வந்த எண்ணெய்க் கிணறு என்றும் கூறப்படுகின்றது. தற்போது இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறிய விசாரணை நடைபெற்று வருகின்றது. வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நைஜீரியாவில் சட்டத்துக்குப் புறம்பாக பல எண்ணெய்க் கிணறுகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் அச்சுறுத்தல்! : 39 பேர் பலி

உலகில் இந்தியா உட்பட பல நாடுகளில் கோவிட் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் சீனாவில் இதற்கு நேரெதிராக ஒமிக்ரோன் தொற்று பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் சீனாவில் புதிதாக 2988 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப் பட்டதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஷங்காயில் 39 பேர் பலியாகி இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மிகப் பெரும் வணிக நகரான ஷாங்காயில் 3 வாரங்களாக நீடிக்கும் முழு ஊரடங்கு ஏப்பிரல் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டுள்ளது. இதனால் உலகில் பல முக்கிய தொழில் நிறுவனங்களுக்குக் கடும் நட்டம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் அந்நாட்டு அரசு பிற உலக நாடுகளைப் போன்று அல்லாது பூச்சிய கோவிட் தொற்று கொள்கையை இறுக்கமாகக் கடைப் பிடித்து வருகிறது. ஆனால் இக்கொள்கை காரணமாகவும், கோவிட் தொற்று காரணமாகவும் உலகின் 2 மிகப் பெரும் பொருளாதார சக்தியான சீனாவின் பொருளாதாரம் தவித்து வருகின்றது.

அதிலும் சீனாவின் மிகப் பெரும் நகராகவும், வணிக மையமாகவும் ஷாங்காய் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 25 மில்லியன் பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

 

உலகில் வடதுருவத்துக்கு அருகே உள்ள நாடான ஐஸ்லாந்து எதிர்கொள்ளும் வித்தியாசமான பிரச்சினை

எமது பூமி வெப்பமடைந்து வருவது காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி அதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வடையும் ஆபத்தினை உலகின் பல நாடுகள் சந்திக்க வேண்டிய நிலை இருப்பது நாம் அறிந்த விடயமே. ஆனால் இதற்கு நேரெதிரான ஒரு சிக்கலை வடதுருவத்தில் கிறீன் லாந்துக்கு அருகேயிருக்கும் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து எதிர்கொள்கின்றது.

அதாவது ஐஸ்லாந்தை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனால் செழிப்பான கடல் வளம் கொண்ட ஐஸ்லாந்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. முக்கியமாக Hofn போன்ற மீன்பிடி வளம் மிக்க கடற்கரையோர கிராமங்களில் கடல் நீர் பின்வாங்கி வருகின்றது.

இதனால் கடற்பாசி போன்ற இயற்கை வளங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் மீன் பிடிப் படகுகளைச் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரும் சரக்குக் கப்பல்களை நங்கூரமிடுவதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction