கருங்கடல் கடற்படையின் முதன்மையான ரஷ்ய ஏவுகணை கப்பல் மோஸ்க்வா, மூழ்கியதாக ரஷயப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரேனிய அதிகாரிகள் தங்கள் படைகள் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளால் இந்தக் கப்பலைத் தாக்கியதாகத் தெரிவித்திருந்த போதும், ரஷ்யா இதனை மறுத்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் கூற்றுப்படி, " போர்க்கப்பலின் மேற்பகுதி, புதன்கிழமை எதிர்பாராத வெடிமருந்து வெடிப்பால் சேதமடைந்து கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. தீயினால் சேதம் காரணமாக, மோஸ்க்வா கப்பல் நிலைத்தன்மையை இழந்த சூழ்நிலையில், திருத்தவேலைகளுக்காக கரைக்கு இழுத்துச் சென்றபோது, ஏற்பட்ட கடற்புயல்காரணமாக, கப்பல் மூழ்கியது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று மொஸ்க்வா கப்பல் ஒடெசாவில் இருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அப்போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வியாழன் காலை நிலவரப்படி, கப்பலில் வெடிப்புகள் நின்றுவிட்ட நிலையில் கப்பல் பழுதுபார்ப்பதற்காக துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே இது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
1983 இல் இயக்கத் தொடங்கிய இக் கப்பலில் 16 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், கனரக வான் பாதுகாப்பு, அத்துடன் டார்பிடோக்கள் மற்றும் கனரக துப்பாக்கிகள் ஆகியவை இருந்தமை குறிப்பிடத்தக்கது.