20 வருடங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் தற்போது படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
மே 31 முதல் ஜூன் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை சுமார் 44% வீதமான துருப்புக்கள் வாபஸ் பெற்றிருப்பதாக அமெரிக்காவின் CENTCOM எனப்படும் இராணுவ மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமை தாங்கவுள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 4 ஆவது முறையாக காணொளி வாயிலாக நடைபெறவுள்ள இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், வாங் யீ உடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி மற்றும் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் மொஹம்மட் ஹனீஃப் அத்மர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
கடந்த மாதம் ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் வகிக்கவும் சீனா முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடம் செப்டம்பர் 11 இற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடெனும் உறுதியளித்திருந்தார். 2020 பெப்ரவரி 29 ஆம் திகதி டோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே மிக முக்கியமான அமைதி ஒப்பந்தம் எட்டப் பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றன.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் மலேசியாவின் ஆளுகைக்கு உட்பட்ட சரவக் மாகாணத்தின் போர்னியோ தீவிற்குள் கடந்த திங்கட்கிழமை சீனாவின் 16 போர் விமானங்கள் பறந்ததாக மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. இது தமது நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்றுள்ள மலேசியா இது குறித்து சீனத் தூதரிடம் விளக்கம் கேட்கப் படும் என்றும் கூறியுள்ளது. சீன அரசு இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.