கடந்த 9 மாதங்களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 2 ஆவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையாக ஆப்பிரிக்க யூனியன் தனது பட்டியலில் இருந்து மாலியை உடனடியாக நீக்கியுள்ளது. மேலும் மாலி மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தவிர வறிய நாடான மாலி சர்வதேச சமூகத்திடம் இருந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. செவ்வாய்க்கிழமை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பின் சமாதான மற்றும் பாதுகாப்பு கவுன்சில் விடுத்த அறிக்கையில், மாலியில் அரசியலமைப்பு சட்டத்தின் படியான முறையான ஆட்சி அமையும் வரை அந்நாட்டின் எந்தவொரு நிறுவனம் அல்லது கல்வி நிலையமோ எத்தகைய ஆதரவையும் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூகமான ECOWAS என்ற அமைப்பும் மாலியுடனான தனது உறவைத் துண்டித்துள்ளது. மேலும் மாலி இராணுவம் உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி தமது அதிகார வட்டத்துக்குள் திரும்ப வேண்டும் என்றும் அங்கு அரசியல் விவகாரங்களில் இருந்து முழுமையாக விலகி விட வேண்டும் என்றும் ஆப்பிரிக்க யூனியன் அழைப்பு விடுத்துள்ளது.
மாலியில் ஜிஹாதிக்களுடனான தொடர்பு மற்றும் ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்களால் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம், கடந்த ஆகஸ்ட்டில் கொலோனல் ஆஸ்ஸிமி கொயிட்டா என்ற இராணுவத் தளபதியின் கீழ் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற இராணுவம் ECOWAS போன்ற அமைப்புக்களின் அழுத்தத்தால் பொது மக்களில் இருந்து இடைக்கால அதிபரையும், பிரதமரையும் நிர்ணயிக்க சம்மதித்தது.
ஆனால் கடந்த வாரம் இவ்வாறு பதவியில் நிர்ணயிக்கப் பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப் பட்டு பின் வியாழக்கிழமை விடுவிக்கப் பட்டனர். பின் அவர்கள் தாமாகவே பதவியைத் துறந்ததாகவும் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இராணுவத் தளபதி கொயிட்டா முழு அதிகாரத்தையும் பெறும் விதத்தில் அவரை இடைக்கால அதிபராக மாலியில் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தான் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2022 ஆமாண்டு ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் மாலியில் தேர்தல் நடைபெறும் என்றும் முன்பு கொயிட்டா தலைமையிலான இராணுவம் உறுதிப் படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.