அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை நிராகரித்துள்ளார் கனேடிய கவிஞரான ரூபி கவுர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ருபி கவுர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பிடென் அரசு ஆதரவு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டி, வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், காஸா பிரதேசத்தில் மக்களை, குழந்தைகளை, இன அழிப்பு செய்யும் இஸ்ரேலுக்கு துணை போகும் அமெரிக்காவினால் கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்து கொள்வது நியாமானதாக இருக்க முடியாது. இந்துசமய தீபாவளி , மக்களின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றும் விழா. இருளில் அல்லல்படும் மக்களின் வாழ்வை மேலும் புதைகுழியில் விழ வைப்பதை ஆதரிக்கும் விழாவாக அதனன் கொண்டாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக் கணக்கானவர்கள், இளங் கவிஞரான ரூபி கவுரின் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப்பக்கத்தினை பின்தொடர்பவர்களாக உள்ளனர். 2014 ல் வெளியான அவரது மில்க் அண்ட் ஹனி கவிதைத் தொகுப்பு, இதுவரை 25 மொழிகளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று, நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட்-செல்லர் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெள்ளை மாளிகையில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வினை துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் தொகுத்து வழங்குவார், எனத் தெரிவிக்கப்ட்டிருந்த போதும், இது தொடர்பாக அவர் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.