பணயக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
" எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இருக்காது. நேற்று செய்ததைப் போல, காசா பகுதியின் வடக்கிலிருந்து தெற்கே பாதுகாப்பான போக்குவரத்து பாதைகள் திறக்கப்படும். இந்த மனிதாபிமான பாதை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் அனுமதிக்கப்படும். காசாவின் பொதுமக்களை தெற்கு நோக்கி வெளியேறுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். " என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கட்டுள்ளது.
இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார். காசாவின் வடக்கிலிருந்து ஸ்டிரிப்பின் தெற்கே செல்வதற்கு இஸ்ரேல் இரண்டு மனிதாபிமான வெளியேறும் வழிகளை திறப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொன்று கடற்கரையோரம் திறக்கப்படும் எனவும், நேற்றுத் திறக்கப்பட்ட முதலாவது பாதை வழியாக 50 ஆயிரம் பொது மக்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, இஸ்ரேலில் பணயக் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல மக்கள், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு சில வாரங்களாக வசித்து வரும் கோடீஸ்வரர் சைமன் ஃபாலிக்கின் ஜெருசலேம் இல்லத்தின் முன் போராட்டம் நடத்தி வருவதாக "ஹாரெட்ஸ்" தெரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காசாவைச் சுற்றி வளைத்துள்ள இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸ் மீதான இறுதித் தாக்குதலுக்கு முன்னேறியுள்ளதாகக் கணிக்கப்படுகிறது.