காசா பகுதியில் முன்னெப்போதும் இல்லாத விரோதப் போரின் ஆரம்ப நாட்களில் இருந்து, மனிதாபிமான போர்நிறுத்தத்தின் அவசியம், உதவிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று யுனிசெஃப் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், " குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துமாறு நாங்கள் போரின் ஆரம்ப நாட்களிலிருந்தே கெஞ்சினோம். டசின் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டது பின்னர் நூற்றுக்கணக்கானவர்களாகவும், இறுதியில் ஆயிரக்கணக்கானவர்களாகவும் மாறியுள்ளது அச்சமும் கவலையும் தருவதாகும். கடந்த பதினைந்து நாட்களில் 3,450க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் வகையில் இது ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்கிறது. " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம்" எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மேலும் தொடர்கையில், " குழந்தைகளுக்கான அச்சுறுத்தல்கள் குண்டு தாக்குதல் என்பவற்றுக்கும் அப்பால் குழந்தைகளின் மன அதிர்ச்சி மற்றும் தண்ணீர் பற்றியும் கவலை கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கின்ற தகவல்களின்படி, காசாவின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தண்ணீர் நெருக்கடி உள்ளது. இதனால் குறிப்பாக கைக்குழந்தைகள் நீரிழப்புக்கு உள்ளாகலாம்.
சண்டை நிறுத்தப்பட்ட பின்பும் கூட, குழந்தைகளுக்கான செலவுகள் வரும் தலைமுறைகளுக்குச் சுமத்தப்படும். காசாவின் மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேருக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவை எனவும் தெரிவிக்கப்படுகிறது. உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கு, காசாவுக்குள் நுழையும் அனைத்து அணுகல் கடவைகளும் திறக்கப்பட வேண்டும்.
“மற்றும் போர் நிறுத்தம் இல்லை என்றால், தண்ணீர் இல்லை, மருந்து இல்லை, கடத்தப்பட்ட குழந்தைகளை விடுவிக்கவில்லை என்றால் அதன் பின்னர் நாங்கள் அப்பாவி குழந்தைகளை பாதிக்கும் இன்னும் பெரிய பயங்கரங்களை நோக்கி செல்கிறோம் என்பதை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.unicef.org.uk/press-releases/gaza-has-become-a-graveyard-for-thousands-of-children/