காஸா பகுதியில் உள்ள ஜபாலியா பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக ஒரு X சமூகவலைத்தளக் குறிப்புத் தெரிவிக்கிறது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டு தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே அறிக்கையில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், சுமார் 120 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் காணவில்லை என்றும் குறைந்தது 777 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக காசாப் பகுதிக்கு விஜயம் செய்த பின்னர், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் ஆணையர் ஜெனரல் (UNRWA) பிலிப் லஸ்ஸரினி "எனது மனிதாபிமானப் பணியின் சோகமான நாட்களில் ஒன்றாகும். ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு முன்பு இந்த பயங்கரமான போர் தொடங்கிய பிறகு நான் உள்ளே நுழைய அனுமதிப்பது இதுவே முதல் முறை. ரஃபாவில் உள்ள ஏஜென்சியின் பள்ளி ஒன்றில் இடம்பெயர்ந்த அகதிகளை தான் பார்வையிட்டேன் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாழ்க்கை மற்றும் சுகாதார நிலைமைகள் புரிந்துகொள்ள முடியாதவை. எல்லோரும் தண்ணீர் மற்றும் உணவு மட்டுமே கேட்டார்கள். குழந்தைகள் பள்ளியில் படிக்காமல், ஒரு துளி தண்ணீர் மற்றும் ஒரு துண்டு ரொட்டியைக் கேட்கிறார்கள். மனதைக் கனக்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். இந்த சோகம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ” என்று கார்டியன் மேற்கோளிட்ட அறிக்கையில் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், மனிதாபிமான போர்நிறுத்தம் நீண்டகாலமாக தாமதமாகியுள்ளது. இது இல்லாமல், அதிகமான மக்கள் கொல்லப்படுவார்கள், உயிருடன் இருப்பவர்கள் மேலும் இழப்பை சந்திக்க நேரிடும், ஒரு துடிப்பான சமூகம் என்றென்றும் துக்கத்தில் இருக்கும். அக்டோபர் 7 முதல் 70 UNRWA ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு பெருமான் அவதரித்த மண்ணில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும் என, உருக்கமாக கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் ( Pope Francis ) வேண்டியுள்ளார். சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு இனமும், தனித்தனியாகத் தங்களை தாங்களே ஆளும் அரசை அமைப்பதே புத்திசாலித்தனமான தீர்வாகும் என இத்தாலியத் தொலைக்காட்சிக்கான செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால் காஸாவிலுள்ள அல்-குட்ஸ் மருத்துவமனையின் அருகாமையில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெடிப்புகள் மற்றும் குண்டுவெடிப்புகளின் சத்தம் கேட்டதாகவும், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதி கடுமையான ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டது எனவும், வலுவான வெடிப்புகளும் சத்தங்களும், மருத்துவமனை குழுக்கள் மற்றும் 14,000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது." என பாலஸ்தீனிய ரெட் கிரசன்ட் "X" ல் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 7,000" வெளிநாட்டினரை போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற எகிப்து உதவும் என. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது, எகிப்திய துணை வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் கைராத், தெரிவித்துள்ளார். "ரஃபா" எல்லைப்பாதை வழியாக காசாவில் இருந்து வெளிநாட்டு குடிமக்களை வரவேற்பதற்கும் வெளியேற்றுவதற்கும் வசதியாக எகிப்து தயாராகி வருவதாகவும், இந்த உதவியின் வழி, 60 வயதுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த "சுமார் 7,000" மக்கள் காசாவை விட்டு வெளியேற முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.
இதேவேளை காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ செய்தித் தொடர்பாளர் இதைத் தெரிவித்தார், அதன்படி இஸ்ரேலியப் படைவீரர்கள் ஹமாஸ் போராளிகளை "பீரங்கி மற்றும் டாங்கிகள் துப்பாக்கிகளின் உதவியுடன் எதிர்கொண்டதாகவும் பல ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் செல்வாக்கு போரின் பின்னதாக மிக வேகமாகச் சரிந்து வருவதாக அரசியல் ஆய்வுச் சஞ்சிகை ஒன்று தெரிவித்த குறிப்புக்கள் சமீபத்தில் அமெரிக்க அதிபர் பிடனுக்கும் அவரது ஒத்துழைப்பாளர்களுக்கும் இடையே வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அதில் இஸ்ரேலியர்கள் மத்தியில் நெதன்யாகுவின் செல்வாக்கு நீண்டகாலம் நீடிக்காது எனக் கருத்துரைக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.
இது இவ்வாறிருக்க, லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் நேற்று மாலை புதிய மோதல்கள் பதிவாகியுள்ளன. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் அழித்ததாக ஹிஸ்புல்லா கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு பதிலாக இஸ்ரேலிய இராணுவம் அதன் டெலிகிராம் சேனலில் கூறியது, "தரையிலிருந்து ஒரு வான் ஏவுகணை லெபனானில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) UAV நோக்கி ஏவப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஏவுகணையை ஏவிய பயங்கரவாதி பிரிவு மற்றும் ஏவுதளத்தை ஐடிஎஃப் தாக்கியது. UAV க்கு எந்த சேதமும் இல்லை. லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹார் டோவ் மற்றும் மவுண்ட் ஹெர்மன் பகுதிக்கு ஏராளமான ஏவுதல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று IDF மேலும் கூறுகிறது. அவை திறந்த பகுதிகளில் விழுந்தன. பதிலுக்கு, IDF பீரங்கி குண்டுகளின் மூலத்தைத் தாக்கியது." எனத் தெரிவித்துள்ளது.