பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகே டால் என்ற எரிமலை சீற்றம் அடைந்து வியாழக்கிழமை வெடித்துச் சிதறியதுடன் கரும் சாம்பல் புகையை வானில் கக்கி வருகின்றது.
இதனால் குறித்த தீவுக்கு அருகே இருக்கும் கிராமங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் எச்சரிக்கை அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது.
இந்த எரிமலை சீற்றத்தால் மக்மா என்ற எரிமலைக் குளம்பு வெளிப்பட்டு கடலில் கலந்து குறித்த பட்டங்காஸ் என்ற மாகாணத்தைப் பாதிக்குமா அல்லது நில அதிர்வுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் இப்போதே கூற முடியாது என்றும் இது முழுமையான வெடிப்பாக இருக்குமா என்பதிலும் தெளிவில்லை என்றும் அரச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெறும் 311 மீட்டர் உயரமே உடைய சிறிய ரக எரிமலையான டால் இன் சீற்றம் காரணமாக மொத்தம் உள்ள 5 அலகுகளில் 3 ஆவது அலகு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
தற்போது டால் எரிமலை அருகே இருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் டால் எரிமலை இறுதியாக வெடித்த போது பல ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டனர். இதன் போது ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மனிலா விமான நிலையைம் தற்காலிகமாக மூடப் பட்டது. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் இருக்கும் பிலிப்பைன்ஸில் இறுதியாக 1991 ஆமாண்டு பினாட்டுபோ எரிமலை வெடித்துச் சிதறியதில் மனிலாவுக்கு வடக்கே நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இத்தாலியின் லம்பேடுசா தீவுக்கு அருகே இரு தினங்களுக்கு முன்பு பயணித்த அகதிகள் படகு விபத்தில் சிக்கியதில் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 7 பேர் பலியானார்கள். 46 பேர் மீட்கப் பட்ட போதும் 9 பேரை இன்னமும் காணவில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.