இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே சமீபத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மே 10 ஆம் திகதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் நீடித்த மோதல்களில் இரு தரப்பிலும் 250 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருந்தனர்.
இதன் பின் துருக்கி மற்றும் உலக நாடுகளின் தலையீட்டால் மே 21 ஆம் திகதி ஏற்பட்ட யுத்த நிறுத்தத்துக்குப் பின்பு முதன் முறையாக காசா மீது மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களின் பிரதான நோக்கம் கிழக்கு ஜெருசலேமை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை வெடிபொருட்கள் நிரம்பிய பலூன்களை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மேலாகப் பறக்க விட்டனர். இதில் ஆங்காங்கே தீப்பற்றியதாக அறிவித்த இஸ்ரேல் பதிலுக்கு ஹமாஸ் போராளிகளின் நிலைகளைக் குறி வைத்து புதன்கிழமை அதிகாலை மீண்டும் வான் வழித் தாக்குதலைத் தொடுத்தது.
இதனால் காசா நகரில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் இத்தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றமும் தொடர்ந்தவாறு உள்ளது. செவ்வாய்க்கிழமை சீனா தமது நாட்டின் வான் பரப்பின் மேலாக 28 போர் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் பல தடவை இது போன்ற போர் விமானங்கள் தைவான் வான் பரப்புக்கு மேலாக சீனா அனுப்பியிருந்த போதும் இம்முறையே அதிகபட்சம் எனத் தைவான் விசனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டனில் இடம்பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் தைவான் உடனா கடல் நீரிணைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என சீனாவுக்கு வலியுறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.