தனது அரசியல் கொள்கைகளுக்கு எதிராக, செயற்கையான சீன அச்சுறுத்தல் கொள்கையை மிகைப் படுத்துவதன் மூலம் மேற்குலக நாடுகளுடன் சீன மோதல் போக்கை உருவாக்குவதாக நேட்டோ அமைப்பு மீது செவ்வாய்க்கிழமை சீனா குற்றம் சாட்டியுள்ளது.
திங்கட்கிழமை புருஸ்ஸெல்ஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் 2031 வரையிலான அடுத்த தசாப்தத்துக்கு வட அத்திலாந்திக் நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டது.
மேலும் இதில் சீனாவின் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அரசநிர்வாக சவால்களை நேட்டோ நாடுகள் கூட்டாக இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் பேசப் பட்டுள்ளது. தனது நட்பு நாடுகளுடனான நல்லுறவை அமெரிக்க அதிபர் பைடென் முதன் முறையாக இந்த மாநாட்டில் புதுப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சீனா சமீப காலமாக தனது உறுதியான நடவடிக்கைகள் மூலம் அதிகரித்து வரும் அணுவாயுதங்கள், வான்வெளி மற்றும் இணைய வழி சைபர் போர் வசதிகள் என்பன எவ்வாறு சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது தொடர்பிலும் நேட்டோ தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சீனா இதற்கு வெளியிட்ட கோபமான பதிலுரையில், செயற்கைத் தனமாக இந்த மோதல் போக்கினை நேட்டோ நாடுகளுக்கிடையே உருவாக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் நேட்டோ அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் ஆனது சீனாவின் அமைதியான அபிவிருத்தி, சர்வதேசத்தின் தற்போதைய நிலையில் அதன் சொந்தப் பங்கு, ஆகியவை மீதான அவதூறு சுமத்தலாகும் என்றும் சீனா கூறியுள்ளது. மேலும் இது ஒரு பனி யுத்த மனப் போக்கின் தொடர்ச்சி என்றும் நேட்டோ குழுவின் மோசமான அரசியல் உளவியல் பணி என்றும் சீனா சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனாலும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் சீனாவின் கூட்டுறவை தாம் எதிர்பார்ப்பதாக நேட்டோ பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்ட்டென்பேர்க் தெரிவித்துள்ளார்.