ஆப்பிரிக்க நாடான புர்கினோ பசோவில் உள்ள கிராமம் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 130 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
2015 ஆமாண்டுக்குப் பின் புர்கினோ பசோவில் நிகழ்த்தப் பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகக் கருதப் படும் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
புர்கினோ பசோவின் வடக்கே யாஹா மாகாணத்திலுள்ள சோல்ஹன் கிராமத்தில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்களில் நூற்றுக் கணக்கான தீவிரவாதிகள் திடீரென நுழைந்து பல்வேறு ஆயுதங்களால் தாக்கி பொது மக்களைக் கொன்று குவித்ததுடன் கிராமத்தையும் தீ வைத்து சூறையாடினர். இக்கொடூர தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். புர்கினோ பசோவில் 2015 ஆமாண்டு முதல் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருப்பதுடன் அடிக்கடி இது போன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டு வந்துள்ளன. இவர்களை ஒடுக்க இராணுவம் கடும் பிரேயத்தனத்தை எடுத்து வருகின்றது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
தெற்கு பாகிஸ்தானில் இரு அதிவேக ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பயணிகள் கொல்லப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் பாதையை விட்டுத் தடம் புரண்ட ஒரு ரயில் மீது இன்னொரு ரயில் வந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் டார்க்கி என்ற நகரின் அருகே திங்கட்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்தது.
இறந்த பயணிகளில் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளதுடன், இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மேலும் மீட்புப் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.