உலகளவில் கடந்த சில வருடங்களாக சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியால் அரசாங்கங்கள் புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப் பட்டன.
ஆனால் கோவிட்-19 பெரும் தொற்றின் தாக்கத்தால் இந்தப் பிரச்சினை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பெரும் தொற்றின் காரணமாக பலரது திருமணம் ஒத்திப் போடப்பட்டு அல்லது நிறுத்தப் பட்டிருந்தமையும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். ஆசிய நாடுகளில் தற்போது ஜப்பானில் 120 வருடங்களில் இல்லாதளவுக்கு கடந்த ஆண்டு புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஜப்பானின் சுகாதார அமைச்சு இது குறித்து வெளியிட்ட தகவலில், 2020 ஆமாண்டு சுமார் 840 832 குழந்தைகளே ஜப்பானில் பிறந்ததாகவும் இது அதற்கு முந்தைய வருடத்தை விட 2.8% வீதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிறப்பு வீதமானது கடந்த 1899 ஆமாண்டில் இருந்து கணிக்கப் பட்ட வருடங்களிலேயே மிகக் குறைந்த வீதம் என்றும் தெரிய வருகின்றது. முன்னதாக உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவிலும் கடந்த வருடம் புதிதாகப் பிறந்த குழந்தைகள் வீதம் 15% ஆகக் குறைவடைந்துள்ளது.
இதனால் சீனாவில் சமீபத்தில் தான் அங்கு தம்பதியினர் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதியளித்து அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் தென்கொரியாவிலும் பிறப்பு விகிதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அங்கும் 2020 இல் முதன் முறையாக மொத்த பிறப்புக்களை விட அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிந்ததாகவும் கணிப்புக்கள் கூறுகின்றன.