சுமார் 11 நாட்கள் நீடித்த இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான கடும் மோதல் போக்கு எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப் படுத்தும் விதத்தில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கபி அஷ்கெனாஸியுடன் எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே சுக்ரே தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான அந்தோனி பிளிங்கென் எதிர்வரும் புதன்கிழமை இஸ்ரேலுக்கும் அதன் பின் வியாழக்கிழமை பாலத்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதிக்கும் செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது அவர் இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்ற நிலையைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் பின் அந்தோனி பிளிங்கென் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
சமீபத்திய இஸ்ரேல் பாலத்தீன மோதலில் 296 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உட்பட 257 பேரும், மேற்கு கரைப் பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காஸாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்குதல் மற்றும் ஏனைய மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றத் தயாராகவிருப்பதாக எகிப்து அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.