மே 22 ஆம் திகதியுடன் ஈரானுக்கும் ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ஏஜன்ஸியான IAEA இற்கும் இடைப்பட்ட 3 மாத அளவு கொண்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை ஈரானின் பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை ஈரானின் சற்று அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான Fars உறுதிப் படுத்தியுள்ளது.
ஈரானின் பாராளுமன்ற பேச்சாளர் மொஹம்மட் பாகெர் கலிபாஃப் மேலும் தெரிவிக்கையில், நேற்று மே 22 உடன் இந்த அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் அதன் பின் எமது அணு உலைகளுக்கு உள்ளே கமெராக்கள் மூலம் பெறப் பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் உரிமை IAEA இற்கு இல்லை என்றுள்ளார். மறுபுறம் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA ஈரான் அரசுடன் குறித்த ஒப்பந்தம் குறித்து சமீப நாட்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒரே கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்களால் ஏற்கனவே பிளவு பட்டுள்ள அக்கட்சியில் மீண்டும் அதிகளவு வேறுபாடு ஏற்படவுள்ளது. இந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிச் கட்சி சார்பாக முன்னால் பாராளுமன்ற பேச்சாளர் அலி லரிஜானி மற்றும் அல்ட்ரா கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக நீதித்துறை தலைவர் எப்ராஹிம் ரைசி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவவுள்ளது குறிப்பிடத்தக்கது.