கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாளை செவ்வாய்க்கிழமை சபையில் முன்வைக்கவுள்ளதாக, பாராளுமன்ற தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூன்று நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்திருந்தார். கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய 19ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் 5.30 மணிவரையும், 20ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 04.30 வரையும் நடத்தப்படவுள்ளது. மே 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
மே 18ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, நிதிச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், முறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 8 கட்டளைகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அன்றையதினம் முற்பகல் 10 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்பமானதும் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படும்.