விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு அதிகபட்ச மதிப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பினர் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விமான நிலைய விரிவாக்கத்துக்காக கீழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை காலி செய்து விமான நிலைய விரிவாக்க பணிகள் செய்வதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு குறைந்த அளவிலான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதி நிலங்கள் மாநகராட்சியுடன் ஒட்டி வருவதால், மாநகராட்சி மதிப்பீட்டில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு விமானநிலையத்தில் பணி வழங்க வேண்டும் என்றும், விரிவாக்கத்திற்கு பிறகு அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சென்று வருவதற்கு உரிய பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியாக கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விட்டு மக்கள் சென்றனர்.