இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ். என்று அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.- பாஜக இடையே கருத்து வேறுபாடுகளை தணிக்க பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார்.
இந்தியாவில் வலதுசாரி அமைப்பான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 3ஆவது முறையாக ஆட்சி புரிந்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேராக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது.
அண்மை காலமாக, ஆர்.எஸ். எஸ்.- பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அரசியலில் பாஜக நன்கு வேரூன்றிய நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவி இனி தேவைப்படாது என்று, பாஜக மூத்த தலைவர்கள் சிலரே வெளிப்படையாக பேசி வந்தனர்.
இந்த சூழலில், பாஜக- ஆர்.எஸ்.எஸ். இடையே கருத்து வேறுபாடுகளை களையும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
அங்கு, ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடம் இருக்கும் டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம் போன்றது. பாஜக அரசு, தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தது. இது,பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்த மாணவர்களும் மருத்துவராக மாறும் வாய்ப்பினை வழங்குகிறது. இந்தியா தனது பாரம்பரிய மருத்துவ அறிவுடன் புதுமையான மருத்துவ அறிவினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் யோகா, ஆயுர்வேதம் உலகில் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவச் சேவையை பெறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஜன் அவுசதி கேந்திரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் மருத்துகளை வழங்குகின்றனர். சுமார் 1,000 டயாலிசிஸ் மையங்கள் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கிராமங்களில் மக்கள் ஆரம்ப சிகிச்சை மற்றும் மருத்துவர் ஆலோசனைகளைப் பெறும் வகையில், லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் திறக்கப்பட்டுள்ளன. இப்போது கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவச் சோதனைக்காக 1000 கி.மீ தூரம் செல்லவேண்டியது இல்லை. இவ்வாறு பிரதமர் நரேந்திர் மோடி பேசினார்.
நரேந்திர மோடி கடைசியாக 2013-ம் ஆண்டு, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றார். பிரதமராக பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். பா.ஜ.க.-விற்கும் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் இடையே நிலவும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.