நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், முதல்முறையாக கூடியது. இதில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தனது திரைப்படத் துறை பயணத்தை கைவிட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார்.
த.வெ.க.வின் முதல்பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை (28ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூடியது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பரப்புரைக்குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:
தேர்தல் மற்றும் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவரான விஜய்க்கே அதிகாரம் வழங்கப்படுகிறது. புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை தவெக எதிர்க்கிறது. ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் டாஸ்மாக் மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக, திமுக அரசை குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்; அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தொகுதி மறுவரை செய்யக்கூடாது; இரு மொழி கொள்கை என்பதில் தவெக உறுதியாக உள்ளது. சென்னை அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கக்கூடாது எனவும் தவெக வலியுறுத்தி உள்ளது.
மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு அதுவே ஒரே தீர்வாக இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள தவெக, சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.