புதுடெல்லி: தமிழக மீனவர்களின் விவகாரத்தை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா- இலங்கை நாடுகள் இடையே மனக்கசப்புகள் இல்லாமல் நட்புறவு நிலவி வருகிறது. எனினும், எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதும், அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், இரு நாடுகளுக்குமே பெரும் சங்கடத்தை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.
இந்த சூழலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மீனவர்கள் கைது விவகாரம் பற்றி உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:
இலங்கை சிறைகளில் 86 இந்திய மீனவர்களும், மேலும் கைதான 11 மீனவர்களும் என மொத்தம் 97 பேர் உள்ளனர். இவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 3 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர். இலங்கையில் சிறை தண்டனை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர், படகு வைத்துள்ள உரிமையாளர்கள் ஆவார்கள். மீனவர்களின் பிரச்சினையை கையாள்வது என்பது மிகவும் சிக்கலானது, சவாலானது.
கடந்த 1974 ஆம் ஆண்டில், இந்தியாவில் மத்தியில் இருந்த அரசும் தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசும் ஆலோசனை செய்து, சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த பிறகுதான் இந்த பிரச்சினை ஆரம்பமானது. அதன்பின்னர், 1976ஆம் ஆண்டில், மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. தற்போது நிலவும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மூல காரணம், 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான்.
அதே நேரம், இந்திய மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.