இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அதுபற்றி ஆலோசனை செய்யவே, ஆர். எஸ்.எஸ். தலைமைகம் உள்ள நாக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் சென்று வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பீடத்தில் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக ஆட்சி புரிந்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேராக, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருந்து வருகிறது.
எனினும், கடந்த சில வருடங்களாகவே, ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே பூசல் நீடித்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்திய அரசியலில் பாஜக நன்கு வேரூன்றி ஆட்சியில் உள்ளதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவி இனி தேவைப்படாது என்று, பாஜக மூத்த தலைவர்கள் சிலரே வெளிப்படையாக பேசி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு, ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடம் இருக்கும் டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரதமராக பதவியில் இருந்த 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் செல்லாத நரேந்திர மோடி, திடுதிடுப்பென அங்கு சென்றது பல கேள்விகளை எழுப்பியது. மேலும், அவரது வருகை இந்திய அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றது.
இதை உறுதி செய்யும் வகையில், பாஜகவின் எதிர்முகாமில் உள்ள, மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து விலகி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்று திங்களன்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது 75 வயது நிறைவடையும் செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்வார்; புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது என்றும், சஞ்சய் ராவத் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், புதிய பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக இருப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா செய்யும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் புதிய பிரதமராவார் என்றும் சஞ்சய் ராவத் எம்பி கூறினார்.
மோடி 10, 11 ஆண்டுகளில் எப்போதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார். அதற்காகவே நாக்பூர் சென்றுள்ளார் என்று ராவத் தெரிவித்தார்.
இவரது பேச்சு, அரசியலில் பரபரப்பை கிளப்ப, பாரதிய ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் கவலை அடைந்தனர். மோடியே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். எனினும், ஆனால், பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக இதை மறுத்துள்ளனர். நடப்பு 5 ஆண்டுகளுக்கும் மோடியே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் ராவத் பேச்சுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார். ஃபட்னாவிஸ் கூறுகையில், “தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. அது முகலாய கலாச்சாரம். அதைப் பற்றி விவாதிக்க இப்போது நேரம் வரவில்லை. பல ஆண்டுகக்கு அவர் நாட்டை வழிநடத்துவார். 2029 ஆம் ஆண்டில், மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியை நாம் பார்ப்போம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் திடீரென ராஜினாமா முடிவுக்கு வந்தாக வெளியான தகவல், இந்திய தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைமை என்ன நினைக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.