கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையின்போது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 51,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி ரச்சனா சிங் கூறும்போது, "கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள், 3 ஆண்கள் உள்பட புதுச்சேரி சேர்ந்த ஒருவர் என 7 பேரை கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருப்பதால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தெரிய வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.