இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுக்காக ஆண்டுதோறும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆளிக்கும் ஒரே மாநிலம் டெல்லி. டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
அதன் முதல்கட்டமாக 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நம்பர் பிளேட் எண் அடிப்படையில் வாகன விவரங்களை கண்டறியும் தானியங்கி கேமரா நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டது. அது தற்போது முழுமை அடைந்துள்ளதால் அரசின் தடை உத்தரவு இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, டில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் தடை செய்யும் 2018 உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்கள் கலக்கத்துடன் உள்ளனர்.