தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் 8 லட்சம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வீடுகளில் முடங்குவர். இவர்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக அரசு சார்பில் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்பதால் அவர்களின் சிரமம் குறையும்.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும். இதனால் மீன்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.