அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சரியமில்லை என விமர்சித்துள்ளார்.
பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே 3 முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் என்றும் தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ., மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.