காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குமரி அனந்தன். இவர், சில தினங்களாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி அனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
கடந்த 1977ஆம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர்.
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கேற்ப, குமரி அனந்தனின் உடல், சென்னை வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில், தமிழக அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.