இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொய் வாக்குறுதிகளை தருவதாக, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசின் விலையேற்ற நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதேபோல், தவெக தலைவர் விஜயும் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பா.ஜ., அரசும் தி.மு.க., அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன. மத்திய பா.ஜ., அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், மத்திய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட மத்திய அரசின் ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதை இதுவரை நிறைவேற்றவில்லை.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள மத்திய அரசின் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு, தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.