தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கும் என்று இதன்மூலம் தெரிகிறது.
இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் தற்போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. அடுத்தாண்டு மே மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென முன் அறிவிப்பு செய்யாமல் டெல்லிக்கு செவ்வாயன்று காலை புறப்பட்டு சென்றார்.
பிற்பகலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார். இந்த பின்னணியில், செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு இந்திய உள்துறை அமைச்சரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் மூத்த தலைவருமான அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு, சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது அ.தி.முக. மூத்த நிர்வாகிகள் சி.வி. சண்முகம், தம்பிதுரை, வேலுமணி, முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதுதவிர, அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை செய்தனர்.
இந்த சந்திப்பு பற்றி இரு தலைவர்கள் தரப்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டு சேர்ந்து போட்டியிடுவது பற்றி ஆலோசனை செய்ததாக, உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பு, தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.