தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் அருகே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த தகவலை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு வரை போக்குவரத்து வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கப்பல் பயணம், மீண்டும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயில் ரயில் பயணம் செய்யும் வகையில் பாதை திட்டமிடப்பட்டது.
அதன்படி, ராமேஸ்வரம் தீவின் பாம்பன் வரை கட்டப்பட்ட பாலம், 1914 இல் பயன்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த பாம்பன் ரயில் பாலத்தில், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து, பழைய பாலத்தில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் போக்குவரஹ்த்டு நிறுத்தப்பட்டது. புதிய ரயில்வே பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகளுக்கு, கடந்த 1.3.2019-இல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் 2,078 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும்.
பணிகள் நிறைவடைந்த நிலையில் பாம்பன் பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார். ராம நவமி தினத்தன்று பாலத்தை திறந்து வைக்கும் மோடி, ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி வருகை தரும் நிலையில், ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருக்கிறது. அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.