இந்தியாவில் பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது என்று, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில், டெல்லி உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா என்பவரின் அரசு இல்லத்தில், மார்ச் 14ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தின்போது நீதிபதியின் அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக தகவல் வெளியாகி, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, அரசுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் விளக்க கடிதம் தரப்பட்டது. அதில், 'அரசு இல்லத்தில் நாங்கள் பயன்படுத்தி வரும் இடத்தில் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை. அந்த பணம் குறித்து எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்த பணத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டம், கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. எனினும், அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இம்முடிவை கடுமையாக எதிர்த்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒன்றும் 'குப்பைத் தொட்டி' அல்ல என்றும் பதில் அளித்திருந்தது.
எனினும், இந்த விவகாரம் குறித்து, கொலீஜியம் திங்களன்று மீண்டும் கூடியது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. நீதிபதி வர்மா, ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகி வந்தவர் என்பதால், அவரை திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.