குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில், கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த போதைப் பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை என, அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
"வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது. எந்தவொரு துறைமுக ஆப்பரேட்டரும் கன்டெய்னரில் என்ன பொருள் உள்ளது என்பதை ஆய்வு செய்ய முடியாது.
துறைமுகத்தை இயக்குவதில் மட்டுமே அவர்களுக்கு பங்கு வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், அதானி குழுமத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் நடத்தப்படும் உந்துதல், தீங்கிழைக்கும் மற்றும் தவறான பிரசாரத்தை நிறுத்த முடியும் என, உண்மையாக நம்புகிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.