சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் 13.09.21 திங்கள் முதல் கோவிட் தடுப்பூசிச் சான்றிதழ் பொது இடங்களுக்கு அவசியமாகிறது. 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது கட்டாயமாகும்.
இதன்படி தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், தொற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்களும், நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்களும்மட்டுமே பொதுவிடங்களில் உள்நுழைய அனுமதியுண்டு.
தங்குவிடுதிகளின் உள்ளரங்குகளில், மதுநிலையங்கள் மற்றும் உணவகங்கள், அதுபோல் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிலையங்கள், நாடக அரங்கு, திரையரங்கு, சூதாட்ட விடுதிகள், நீச்சல்நிலையங்கள், அருங்காட்சியங்கள், விலங்குகாட்சிசாலை, மற்றும் உள்ளரங்குகளில் நடைபெறும் இசைக்கச்சேரி, விiளாயட்டு நிகழ்வு, மன்ற நிகழ்வுகள் என்பவற்றுக்கும், பொது இடத்தில் நடைபெறும் தனியார் திருமண விழாக்கள், என்பனவற்றிற்கும் தடுப்பூசி சான்றிதழ் எதிர்காலத்தில் கட்டாயமாகும்.
ஆயினும், பொதுப்போக்குவரத்து, மற்றும் தனியார் இடங்களில் 30 ஆட்களுக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்வுகளுக்கு தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. அதுபோல் சமயவழிபாடு மற்றும் அரசியல் கருத்தினை வெளிப்படுத்தும் அரசியல் பேரணிகளுக்கு 50 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை. பாராளுமன்றக் கூட்டங்களுக்கும், ஊராட்சி மன்றக்கூட்டங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
உள்ளரங்குகளில் நடைபெறும் உடற்பயிற்சி அல்லது இசை நாடக ஒத்திகைகளில் ஒரு இடத்தில் ஆகக்கூடியது 30 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை. போதிய இடைவெளி அல்லது பலஅறைகள் இருப்பின் ஒரு அறைக்குள் 30 ஆட்கள் எனப் பிரிந்திருப்பின் அவர்கள் தடுப்பூசிச்சான்றிதழ் முறையைக் கடைப்பிடிக்க தேவையில்லை.
தடுப்பூசி இடாதோர் பொதுநிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாது, அவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தால் மட்டுமே பொதுவிடங்களுக்கு செல்லலாம். இந்தப் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை இதுவரை சுவிஸ் அரசு ஏற்றுவந்தது. ஆனால் எதிர்வரும் 01.10.21 முதல்இக்கட்டணங்களை பரிசோதனை செய்பவரே முழுமையாக செலுத்த வேண்டும்.
தொற்று ஏற்பட்டிருப்பாதாக மருத்துவமனையோ - மருத்துவரோ ஐயம்கொண்டு எவருக்காவது பரிசோதனை செய்தால் அதற்கான செலவை சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும், ஆனால் அவர்களுக்கு தொற்றுப்பரிசோதனை செய்தமைக்கு சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
இந்நடவடிக்கை எதிர்வரும் 24. 01. 2022 வரைக்கும் முதற்கட்டமாக செல்லுபடியாகும். எதிர்வரும் நாட்களில் தொற்று எவ்வாறு அமைகின்றது என்பதைப் பொறுத்து, அடுத்த கட்ட முடிவை அரசு எடுக்கும். நோய்த்தொற்று கட்டடுப்பாட்டிற்குள் வந்து, மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வோர் தொகை விரைந்து குறைவடைந்தால், இச்சான்றிதழ் கட்டாயமும் விரைந்து மீளப்பெற்றுப்கொள்ளப்படலாம்.
தடுப்பூசி சான்று மீறப்பட்டு நிகழ்வுகளில் சான்றுகளின் தேவை கடைப்பிடிக்காவிடின் விதிமீறும் ஒவ்வொருவரும் தலா 100.—பிராங்குகள் தண்டனைப்பணம் செலுத்துவதோடு, நிகழ்வு ஏற்பாட்டு நிறுவனம் சுவிஸ் அரசால் நிலையாக இழுத்துமூடப்படும் வாய்ப்பும் உண்டு.
நடைபெறுகின்ற நிகழ்வுகளில் தடுப்பூசி சான்று உரியமுறையில் பரிசோதிக்கப்பட்டு, பதியும் பொறுப்பினை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் முழுமையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பினை, சுவிற்சர்லாந்தின் நடுவனரசு, மாநில அரசுகளிடம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.