கார் விலை மிக அதிகம். அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.
பள்ளியை பொறுத்தவரை மிக லேட் ஆக தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக லேட் ஆக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள். எதாவது புராஜக்டை எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
68% வரி. பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும், கார்டியாலஜிஸ்ட் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்ட்ட வேலைக்கு போகலாம். கார்டியாலஜிஸ்ட் ஆகவிரும்பாதவர்கள் சம்பளத்துக்காக கார்டியாலஜிஸ்ட் ஆகவேண்டியது இல்லை.
வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துவிடலாம். மதிய உணவை கம்பனிகளில் தனியாக உண்ணமாட்டார்கள். ஆபிஸில் முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாக கூடி ஒரே அறையில் உண்ணுவார்கள். பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், அனைத்து கட்சி எம்பிக்கள் என அனைவரும் இப்படித்தான் ஒன்றாக கூடி உணவை உண்ணுவார்கள்.
மக்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும் என்பதால் அரசு பல கிளப்புகளை ஸ்பான்சர் செய்கிறது. மாலைகளில் செஸ், பொம்மை செய்வது..இப்படி பல கிளப்களில் சேர்ந்து கலைகளை கற்றுக்கொள்ளலாம். கூடி பேசலாம்.
அரசு பல கூட்டுறவு வீடுகளை ஒன்றாக கட்டியுள்ளது. Bofaellesskap என பெயர். 30 குடும்பங்களை குடியமர்த்துவார்கள். இங்கே விதியே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்பதுதான். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடிவருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கமில்லாமல் போகலாம்.வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
பணம், ஆடம்பரம் ஆகியவற்றை சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம்டபிள்யூவில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனை கூடுதலாக மதிக்கும் நாடு. அதனால் பணக்காரன் என சொல்லிக்கொள்லவே பலரும் கூச்சபடுவார்கள். தன் வளமையை பொருட்களை வாங்கி காட்டமாட்டார்கள். காட்டினால் மக்கள் தன்னை வெறுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்.
பகிர்வு:
நன்றி, தோழர் முருகானந்தம்!