ஒடிசாவையும் மேற்கு வங்கத்தின் மேற்குப் பகுதியையும் புறப்போட்டது யாஷ் புயல்.
புயலின் கொடும் தாண்டவம் பற்றிய செய்திகள் சேகரிப்பில் மே 26 அன்று ஈடுபட்டிருந்தார் ‘நக்ஸத்ரா’ என்கிற செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் புயல் நேரத்திலும் வெளியே நடமாடுகிறர்களிடம் எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டுப் பதிவு செய்துவந்தார். அப்படி வெளியே வந்திருந்த ஒருவரை அணுகிய செய்தியாளர், “காத்து வேகமா வீசிக்கிட்டிருக்கு, புயல் கரையை கடக்கும் நேரம் நெருங்கிக்கிட்டிருக்கு. நீங்க எதுக்காக வெளியே வந்திருக்கீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தக் குடிமகனின் பதில்: “நீங்க இப்ப வெளியே வந்திருக்கீங்கள்ல? அது மாதிரிதான் நானும் வந்திருக்கேன்.” என்றார். இந்த பதிலை சற்றும் எதிர்பாராத செய்தியாளர், “நான் செய்தி சேகரிக்கிறதுக்காக வந்திருக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார். அவர் உடனே திருப்பிக் கேட்டிருக்கிறார்: “நாங்கள்லாம் வெளியே வராட்டி நீங்க யாரை வெச்சு செய்தி போடுவீங்க?!" வாயடைத்துப்போன செய்தியாளர். இதை தனது டிவியிலும் ஒளிப்பரப்பு செய்தார். இதைக் கண்ட ஒடிசாவின் பிற பகுதி மக்கள் சிரித்து தீர்த்திருக்கிறார்கள். இந்தக் காணொளியை மீட்புப் பணிகளில் இருந்த காவல்துறை அதிகாரியாக அருண் போத்ரா என்பவர் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டு “இவருக்கு எவ்வளவு நல்ல மனது. மனிதகுலத்திற்கு சேவையாற்றும் இவருக்கு என் மரியாதை,” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு பலரும் நகைச்சுவையாக கருத்துகள் கூறியிருக்கிறார்கள். இவரைப் போன்றவர்கள் மட்டும் இல்லையென்றால், உலகத்தின் மன அழுத்தம் எப்படித்தான் தணியும்? இதுதான் துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்பதுபோலும்.