குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .
இதுகாறும் குதிரை அந்நிய இறக்குமதி என்று சிலர் ஆய்வுகள் வழி கூறக் கண்டு வந்துள்ளோம் ; அது ஒரு முற்றுப்புள்ளி பெறுவது தொடர்பில் தமிழர் தக்க மேற்படி ஆய்வுக்களம் காணல் வேண்டும். பரி என்றால் குதிரை என அனைவரும் அறிவோம் ; திருவள்ளூர் - பரிகுளம் அகழ்வாய்வில் கிடைத்த ஆதிமனித கற்கால சான்றுகளுடன் கூடியது குதிரையின் புதை எச்சங்களில் ஒன்றான பற்கள். பரிகுளம் அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2005 - 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இங்கு நிலவிய பழைய கற்காலத்தை 5 லட்சம் ஆண்டு முன் என்று கொண்டு செல்கிறார் தொல்லியல் அறிஞர் சாந்தி பப்பு . பரிகுளம் தொடர்பான விவரங்கள் மக்கள் மத்தியில் பரவலாக்கம் பெறாமல் இருப்பது கவனிக்கப் பெறல் வேண்டும். பரிகுளம் அகழாய்வில் குதிரையின் பற்கள் கிடைத்தன. குதிரை இங்கிருந்த விலங்கினங்களில் ஒன்றாக கருதப் பட வேண்டியுள்ளது என்பது அவரது கூற்றாகும். பரிகுள ஆதிமனிதர்களின் கல் ஆயுத தொழில் கூடத்தின் வயது 2 லட்சம் ஆண்டுகள் என்பதும் அவரது கூற்று ; ஆக , ஆதி தமிழர்க்கும் குதிரைக்குமான தொன்மம் மேற் கண்டபடி தொகுக்கப்படுகிறது ; தொடர்ந்து , குதிரை மரபணு சோதனை முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.தமிழர்களுக்கும் குதிரைக்கும் அந்நியம் இல்லை என்பதற்குத் தமிழக பாறை ஓவியங்கள் சான்றாகும். அவற்றில் குறிப்பிடத்தக்கது கரிக்கையூர் , மல்லபாடி பாறை ஓவியங்கள் ஆகும்.