free website hit counter

மேற்குத் தொடர்ச்சி மலையை அழித்தொழிக்க ஒரு ரயில் திட்டம்!

பயணங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகிலுள்ள தலைசிறந்த பத்து பல்லுயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கிப் பாய்கிற 38 ஆறுகளுக்கும், அரபிக்கடலில் கலக்கிற 27 ஆறுகளுக்கும் கர்ப்பப்பை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தான்.

காவிரி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற பெருநதிகளும் இவற்றில் அடக்கம். இப்படிப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில்..

7400க்கும் மேற்பட்ட வகையான பூக்கும் தாவர இனங்கள்
1800க்கும் மேற்பட்ட வகையான பூக்காத் தாவர இனங்கள்
139 வகையான பாலுட்டியினங்கள்
508 வகையான பறவையினங்கள்
180 வகையான நீர்நில வாழ்வி இனங்கள்
6000 வகையான பூச்சியினங்கள்
290 வகையான நன்னீர் மீனினங்கள்

போன்ற உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்வதாக இது வரை பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரையில் கண்டறியப்பட்ட உயிரினங்களில் 325க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உலக அளவில் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பட்டியலில் இடம் பெறாத இன்னும் பல வகை உயிரினங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

இத்தனை உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ச்சூழல் மற்றும் புவியியல் உறுதித் தன்மை மனித நடவடிக்கைகளால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விழுகிற ஆபத்தில் இருக்கிறது. எனவே இனி இந்த வட்டாரத்தில் எந்த விதமான மனித நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை வரவழைக்கும். இந்த எச்சரிக்கைகள் கேரள வெள்ளம் போன்ற இயற்கை விடுக்கும் ஒவ்வொரு எச்சரிக்கையின் போதும் கவனிக்கப்படுகிற மாதவ் காட்கில் போன்ற சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்தாகும்.

இந்த அளவுக்கு சூழலியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு மிகப்பெரிய அழிவு வேலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது உலகமே அஞ்சி நடுங்கி இயற்கையின் அருமை உணர்ந்து திருந்திக் கொண்டிருப்பதாக நம்பிக்கை துளிர்த்துக் கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில்.

தன்னுடைய மொத்தத் திட்டவரைவில் 90% அடர்ந்த சோலைவனங்கள், சதுப்புநிலப்பகுதிகள் ஒரு புலிகள் சரணாலயம் ஆகியவற்றைக் கபளீகரம் செய்யவுள்ள ‘ஹூப்ளி - அங்கோலா இருப்புப் பாதைத் திட்டம்’ தான் அது.

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி
29 வகையான பாலூட்டியினங்கள்,
256 வகையான பறவையினங்கள்,
8 வகையான ஊர்வனயினங்கள்,
50 வகையான வண்ணத்துப் பூச்சியினங்கள்

வாழும் அந்த உயிர்ச்சூழல் மண்டலத்தை ஊடறுத்துச் செல்ல உள்ள திட்டம் இது. மேற்கண்ட 29 வகையான பாலூட்டிகளில் பெரும்பான்மையானவை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் மிகவும் ஆபத்துக்குள்ளானதான சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 1972ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்புப் பட்டியலிலும் அவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினங்களின் ஒற்றைப் பாதுகாப்பான அடர்வனத்தில் அரசு அறிவித்துள்ள எண்ணிக்கைப்படி மட்டும் அழிக்கப்பட உள்ள மரங்களின் எண்ணிக்கை 2.34 லட்சம். கண்டிப்பாகக் குறைந்தபட்சம் இதைவிட இருமடங்கு எண்ணிக்கையாவது இருக்கும் என்பதை நமது அரசுகளின் நேர்மை குறித்தான அனுபவம் நமக்கு சொல்லாமல் சொல்கிறது. 327 பாலங்கள், கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட 34 குகைகளும் இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட உள்ளன. ஒற்றைச்சொல்லில் சொல்வதானால் அழிவு நடக்க உள்ளது.

பல லட்சம் வருடங்களாக இயற்கை நெய்து வைத்துள்ள ஒரு அழகிய பட்டாடையான இந்த வனத்தில் இந்தத் திட்டம் துவங்கப்படுமானால் ஏற்கனவே பெருத்த சிக்கலுக்குள்ளாகியுள்ள மழைப் பொழிவு நடைமுறையில் இன்னும் பெருத்த அடி விழும். பெருமளவிலான மண் சரிவுகளும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பும் நிகழும். சுரங்கத் தொழிலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தால் வருகிற வருமானத்தை விட இதன் காரணமாக ஏற்படவுள்ள இயற்கைச் சீரழிவுகளால் விளைகிற நஷ்டம் சர்வநிச்சயமாய்ப் பல மடங்கானதாக இருக்கும்.

என் அன்னை நாடு வெல்லட்டும் எனத் தொண்டை நரம்பு வெடிக்க முழக்கமிடுகிற அரசியல் கட்சிகள் அன்னை மண்ணைக் குதறியெடுக்கும் வெறியைக் கைவிட வேண்டும். பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் சர்வதேசக் குடிமக்களையும் தன் சீடர்களாகக் கொண்டிருக்கிற #காவிரிகூக்குரல் ஐ முன்னெடுக்கிற பலம் பொருந்திய ஆன்மிகத் தலைவர்கள் முதலானோர் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டுத் தடுக்க வேண்டும்.

குத்துவாள்கள் கொண்டு இதயத்தைக் கூறு போட்டுவிட்டு ரத்தக் குழாய்களுக்கு மட்டும் தங்கத்தால் காப்புப் போடுவதால் எந்த நன்மையும் விளைந்து விடாது என்பதை அவ்வளவு பெரிய குருமார்களுக்கு நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லித் தர வேண்டிய அவசியம் இருக்காது.

- தி ஒயரில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula