free website hit counter

கற்ப மூலிகை - இஞ்சி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை யூன்றிக் குறுகி நடப்பவர் கோலைவிட்டு குலவி நடப்பாரே".

சித்தர் தேரையரால் பாடப்பெற்ற- உடலை கல்லைப் போன்று பாதுகாக்கும் காயகற்ப மூலிகையான இஞ்சியின் பயன்களையும் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி இன்று ஆராய்வோம். தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட இத் தாவரமானது பரவலாக அயனமண்டல நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. பொதுவாக இலங்கையில் மரக்கறி தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றது. நீர் செழிப்புள்ள இடங்களில் வளரும் தாவரம் ஆகும்.

இதன் தாவரவியல் பெயர்- Zingiber officinale
குடும்பம்- Zingiberaceae
ஆங்கிலப் பெயர்- Green Ginger
சிங்களப் பெயர் - இங்குரு
வேறு பெயர்கள் - மகாஷௌதம், விடமூடிய அமிர்தம், மதில்
உலர் இஞ்சி- சுக்கு, வேர்க்கொம்பு
பயன்படும் பகுதி- மட்டநிலத்தண்டு
இஞ்சி புறநஞ்சு ஆகையால் அதன் செதிலிலைகளை அகற்றிய பின்னே பயன்படுத்த வேண்டும்.
பச்சையான நிலையிலும் உலர்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம்.

மருத்துவச் சத்துகள்-
பிரதானமாக Zingerone , Shagaol காணப்படும். மணத்திற்கு காரணமான வேதியியற் பதார்த்தம் Camphene அடங்கிய Volatile oil ஆகும். மேலும் Phellandrene, zingiberene, cineol, barneol, gingerol, oleo resin, gingerin, starch, citral, linalool, geraniol, caprylic acid, malate ஆகிய மருத்துவ சத்துக்களும் காணப்படுகின்றன.
சுவை- கார்ப்பு
வீரியம் - வெப்பம்
பிரிவு- கார்ப்பு
மருத்துவ செய்கைகள்- அகட்டுவாய்வகற்றி carminative
பசித்தீ தூண்டி stomachic
உமிழ்நீர் பெருக்கி sialagogue
செரிப்புண்டாக்கி digestive
வெப்பமுண்டாக்கி stimulant
தடிப்புண்டாக்கி rubefacient
இசிவகற்றி anti-spasmodic
கோழையகற்றி expectorant
சுரமகற்றி anti-pyretic
வேதனாசாந்தினி analgesic
வாந்தியடக்கி anti-emetic
வாதமடக்கி anti- inflammatory
பெருங்குடல் காற்று நீக்கி anti-flatulent
கொழுப்பை குறைக்கும் hypo cholesterolamic
இரத்த அழுத்தத்தை குறைக்கும் hypotensive
ஈரல்தேற்றி hepato protective
வியர்வை பெருக்கி diaphoretic

வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், வாந்தி, குடல்நோய், குன்மம், மலச்சிக்கல், ஜலதோஷம், இரைப்பு நோய், இருமல், தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், சந்நிபாதசுரம், வாதாதி சுரம், வாதசூலை, வாதகோபம், பித்ததோஷம், ஒற்றைத் தலைவலி, குருதிச்சோகை, பசியின்மை போன்ற நோய்நிலைமைகளில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை - மதுஊறல் செய்து கொடுக்கலாம்.
செய்முறை-
இஞ்சிச்சாறு, நீர், சர்க்கரை சேர்த்து தேன் பருவத்தில் பாகு செய்து குங்குமப் பூ, ஏலம், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவிக் கிளறி எடுத்து தூய்மையான கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளலாம். மருந்து அளவு- 1 அல்லது 2 சுண்டையளவு எடுக்க வேண்டும்.

உலர் இஞ்சி மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க வைத்த நீரானது காய்ச்சல் மற்றும் தடிமனுக்கு உலகளாவிய ரீதியில் கைம்மருந்தாக செய்யப்படுகின்றது.

இருமல் மற்றும் ஆஸ்துமாவிற்கு வெள்ளைப் பூண்டு சாறுடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரை துப்ப தொண்டைப்புண், குரற்கம்மல் குணமாகும். அஜீரண பேதிக்கு இஞ்சிச்சாற்றை தொப்புளை சுற்றி தடவலாம். வாந்தி, ஓக்காளம் இவைகளுக்கு இஞ்சிச்சாறும் வெங்காயச்சாறும் சேர்த்து கொடுக்கலாம். நீரிழிவு நோய்க்கு இஞ்சிச்சாறுடன் கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம். மேலும் இஞ்சி கிழங்கானது ஊறுகாய், தேனூறல், தித்திப்பு பானம் செய்யப்படுவதோடு சமையலுக்கு சுவையூட்டியாகவும் கேக் மற்றும் இதர இனிப்பு பண்டங்களுக்கு நற்காப்பியாகவும் பயன்படுகின்றது.

இஞ்சி- கற்பம் இஞ்சியை தோல்நீக்கி தேனில் ஊறவைத்து தினந்தோறும் கற்பமுறைப்படி உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி நீண்டநாள் வாழ்வதுடன் தேகமும் அழகு பெறும். மனோபலமும் உண்டாகும்.
பத்திய உணவு- நெற்பொரிமாவுடன் பசுவின் நெய் சமன்கலந்து ஆகாரத்திற்கு பதிலாக உண்ண வேண்டும். சின்ன வியாதிகளுக்கு கூட அலோபதி மருந்துகளிடம் மண்டியிடாமல் இவ்வாறு பல வகைகளில் எமக்கு பயன்படும் கற்பமூலிகையான இஞ்சியை எமது அன்றாட வாழ்வில் உபயோகித்து பயன்பெறுவோமாக.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction