பதப்படுத்திய உடனடி உணவுகளுக்கும், செயற்கை குளிர்பானங்களுக்கும் விளம்பரப்படுத்திய காலம் போய் இயற்கை உணவுகளுக்கும் , மூலிகை மருந்துகளுக்கும் விளம்பரம் செய்யும் காலமாகி விட்டது.
உணவே மருந்தாகி வாழ்க்கையே மருத்துவமாகி இருந்த காலம் நம் பழைய தலைமுறை வாழந்த காலம். நம் தலைமுறைக்கு மருந்தே உணவாகி மருத்துவமே வாழ்கையாகிவிட்டது. நதிக்கரையில் தொடங்கிய மனித நாகரிகம் இன்று நகர்ப்புற கடைக்குள் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
அன்று மனிதன் இயற்கையை உண்டான்; உடுத்தான். நோய் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தான்.மனித தேவைகளும் , விருப்பங்களும் கூட கூட மூளை விருத்தியடைந்து முன்னெப்போதும் இல்லாதவாறு சிந்திக்கத் தொடங்கி புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கினான்.
இயற்கை பள்ளிக்கூடமானது; மனிதன் பாடம் கற்கத் தொடங்கினான் ;கடவுள் ஆசிரியன் ஆனான். சனத்தொகை பெருகியது .இயற்கை வளம் குறைந்தது.மனிதன் மீண்டும் சிந்திக்க தலைப்பட்டான்.செயற்கையான கண்டுபிடிப்புகளை இயற்கையை உருமாற்றிப் பெற்றான்.மருந்து உணவானது; மருத்துவம் வாழ்கையானது .இவ்வாறு நோய்களையும் வைத்திய சாலைகளையும் ஆராதிக்கத் தொடங்கினான் . சமையலறைகள் தான் உண்மையான வைத்தியசாலைகள் என்பதையே மறந்தான். இன்று சமையலறைகள் ஒவ்வொருவரதும் கல்லறைகளாகிக் கொண்டிருக்கின்றன .
மிளகு ,சீரகம் ,கடுகு, புளி, பூண்டு , பெருங்காயம் , இஞ்சி , மஞ்சள் எல்லாம் இயற்கை மருந்து மூலிகைகள்.பாரம்பரிய சமையலில் நிச்சயம் இவையெல்லாம் சேர்ந்து உணவை மெருகேற்றும். அஜீரணக் கோளாறுகளை, உணவில் சேரும் நஞ்சுகளை முறிக்கவல்லன. 10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது ஆன்றோர் வாக்கு . உடற்தாதுக்களை பேணி முத்தோஷங்களை சமநிலையில் வைத்திருப்பன. இவையெல்லாம் இயற்கையாக உணவில் சேரும் போதே பிணியின்றிய வாழ்கையை பல்லாண்டு வாழலாம் ஆனால் நாமோ மேல் நாட்டு மக்களின் உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம்.அதற்கு நாம் கொடுக்கும் விலை எம் ஆரோக்கியம் . அவர்களது உணவுகளோ அவர்களது காலநிலைக்கும் சூழலுக்கும் ஏற்றது. குளிர் பிரதேசங்களில் வாழப்பழகிய/ வாழவேண்டிய மக்களின் உடலில் கட்டாயம் கொழுப்புப்படை அதிகளவில் காணப்பட வேண்டும். உடல் வெப்பநிலையை சூழலுக்கு வெளியேற்றாது தக்க வைத்துக் கொண்டிருக்கும். அதனால் அவர்கள் கொழுப்பு அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்கிறார்கள். ஆனால் நாம் வாழ்வதோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள அயனமண்டல நாடுகளில். இதனால் வெப்பக்காவலியாக தொழிற்பட அதிகளவு வெப்பத்தை உற்பத்தி செய்ய எமக்கு கொழுப்பு அதிகளவில் தேவையில்லை. இயற்கை விதிப்படி எமது காலநிலைக்கும் சூழலுக்கும் ஏற்றபடியே தாவரங்கள் எமது பிரதேசத்தில் வளர்கின்றன. அவற்றை அறிந்து சரியான முறைப்படி உண்பதால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் நம்மை நெருங்காது பாதுகாத்துக் கொள்ளலாம்.
உண்மையில் சொல்லப்போனால் நாம் இயற்கை வாழ்வியலைத் தான் விரும்புகின்றோம். அதனால் தான் இயற்கையை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்களை கண்டு ஏமாந்து போகின்றோம். விற்பனை பொருள்களின் சிட்டைகளில் இயற்கை தாவரங்களின் படங்களை கண்களுக்கு தெரியும்படி காட்சிப்படுத்தி செயற்கை சேர்மானங்களை கண்களுக்கு அகப்படாத இடத்தில் சிறிதாக அச்சிடுகிறார்கள். பீட்சா, பர்கர்களின் வெளித்தோற்றங்களில் சத்தான காய்கறிகள் அடுக்கப்பட்டு உயிரைக் எடுக்கும் எதிரிகள் அறிவுக்கப்பால் மறைக்கப்படுகின்றன. வியாபார உத்திகள் எம்மை மதிமயக்கிவிடுகின்றன.
சுவைக்கு அடிமையாகிப் போன எம் நாவுகளுக்கு மேலைநாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் ஏவுகணைகள் தான் வெள்ளை சர்க்கரையும் மைதா மாவுத் தீன்பண்டங்களும் மென்பானங்களுமாகும். உணவையும் அவர்களே வழங்கி அதன் மூலம் நோய்களையும் விதைத்து அதற்கான தற்காலிக தீர்வாக மருந்து மாத்திரைகளையும் அள்ளி வழங்குகின்றார்கள் - கொடை வள்ளல்கள்!
மேலைத்தேய கலாசார ஆதிக்கம் உணவுகளில் மட்டும் அல்ல, நாம் உடுத்தும் உடை தொடக்கம் பற்பசை வரை அடக்கம். மெல்ல மெல்ல மறந்தோம் நம் மரபுரிமைகளை. அவன் மெல்ல மெல்ல புகுத்தினான் அவன் கலாசாரத்தை வியாபாரமாக. நாம் இன்று மாறிக் கொண்டிருக்கின்றோம் நாகரிக கோமாளிகளாக.
நாம் மறந்துவிட்ட நம் மரபுகளை மாறாது மீட்டெடுப்பது நம் தலையாய கடமையல்லவா? சித்த மருத்துவத்தை சீரிய முறையில் கற்று மக்களுக்கு அதனை பயனுள்ள வகையில் அளிக்க வேண்டும் என என் சித்தம் விரும்புகின்றது. நவீன நாகரிகம் எனும் மோகவலைக்குள் கட்டுண்டு கிடக்கும் மக்களை மரபு போற்றும் நாகரிக மக்களாக மாற்ற வேண்டுமென நினைக்கின்றேன். மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றியும் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய போசணை மிகு மூலிகைகள் பற்றியும் சிறு சிறு கைம்மருந்துகள் பற்றியும் தொடர்ந்து 4தமிழ்மீடியா வலைத்தளத்தில் பதிவிடலாம் என நினைக்கின்றேன். உங்கள் அனைவரினதும் ஆதரவை வேண்டியவளாய்...
சூரிய நிலா